“இதை என்னால் மறக்க முடியாது” - ஓய்வை அறிவித்த மொயின் அலி உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

Sep 8, 2024 - 17:20
Sep 9, 2024 - 10:56
 0
“இதை என்னால் மறக்க முடியாது” - ஓய்வை அறிவித்த மொயின் அலி உருக்கம்
டி20யில் அதிவேக 50 ரன்கள் எடுத்ததை நான் பெருமையாக கருதுகிறேன் - மொயின் அலி

கடந்தாண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த, மொயின் அலி, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அழைப்பை ஏற்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடினார். இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இதை அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள மொயின் அலி, “நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். இது அடுத்த தலைமுறைக்கான நேரம். இது குறித்து எனக்கு ஏற்கனவே விளக்கப்பட்டது. இது சரியான நேரம் என்று உணர்ந்தேன். நான் என் பங்கை செய்து முடித்துவிட்டேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முதலில் இங்கிலாந்து அணிக்காக விளையாடும்போது, ​​​​எத்தனை போட்டிகளில் விளையாடப் போகிறேன் என்று தெரியாது. கிட்டதட்ட 300 போட்டிகளில் விளையாடி உள்ளேன். எனது முதல் சில வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே கழிந்தது. ஒரு நாள் போட்டிகளில் இயன் மோர்கன் [முன்னாள் கேப்டன்] கையில் எடுத்துக்கொண்டதும், வேடிக்கையாக அமைந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் தான் முறையான கிரிக்கெட்” என்றார்.

தனது வாழ்வின் மிகச்சிறந்த தருணம் குறித்து கூறிய மொயின் அலி, "ஆஷஸ் தொடர் மற்றும் இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது சிறப்பான தருணம். ஆனால் தனிப்பட்ட முறையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து, போட்டியை வென்றது சிறப்பானதாகும். மேலும், இங்கிலாந்து அணிக்காக (2022ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 16 பந்துகளில்) டி20யில் அதிவேக 50 ரன்கள் எடுத்ததை நான் பெருமையாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமாக மொயின் அலி, 68 டெஸ்ட், 138 ஒருநாள் போட்டி, 92 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் நீண்ட காலமாக இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கிலாந்து 2019ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற போதும், 2022ஆம் டி20 உலகக்கோப்பையை வென்றபோதும் அணியில் இடம்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

2014ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில், 5,000 ரன்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களில் பட்டியலில் [298 போட்டிகள், 6678 ரன்கள், 366 விக்கெட்டுகள்] மொயின் அலி இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் [258 போட்டிகள், 8,343 ரன்கள், 401 விக்கெட்டுகள்], ஜேசன் ஹோல்டர் [258 போட்டிகள், 5,733 ரன்கள், 370 விக்கெட்டுகள்], பென் ஸ்டோக்ஸ் [245 போட்டிகள், 10,229 ரன்கள், 290 விக்கெட்டுகள்] ஆகியோர் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow