’நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை.. ஆனால்..’..குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியா அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயை குணமாக்க இந்தியா தடுப்பூசி தயாரித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கர்ப்பப்பை புற்றுநோயை குணமாக்க புதிய சிகிச்சை நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளோம்.

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று (21ம் தேதி) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். இதன்பிறகு டெலாவேரில் உள்ள கிரீன்வில்லே இல்லத்துக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கட்டித்தழுவி உற்சாகமாக வரவேற்றார். பின்னர் இருவரும் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்
பின்னர் வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகரில் குவாட் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு ஜோ பைடன் தலைமை தாங்கினார். மேலும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘’குவாட் மாநாட்டில் உங்கள் வலுவான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி கூறுகிறேன்’’என்று கூறி தனது பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ’’நாம் அனைவரும் குவாட் மாநாட்டில் கூடியிருக்கும் இந்த நேரத்தில் உலகத்தை பதட்டம் மற்றும் மோதல்கள் சூழ்ந்துள்ளன. இந்த சூழ்நிலையில் குவாட் அமைப்பு ஒன்றாக இணைந்து ஜனநாயக மதிப்புகளை பகிர்ந்து கொள்வது மனித குலத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. நாம் அனைவரும் சர்வதேச விதிகள், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, அனைத்து பிரச்சனைகளுக்கும் அமைதியான தீர்வு ஆகியவற்றை ஆதரிக்கிறோம்.
மேலும் நாம் ஒன்றிணைந்து சுகாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பல நேர்மறையான முயற்சிகள் மற்றும் உள்ளார்ந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். குவாட் அமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், ஒருவருகொருவர் உதவி செய்வதற்கும் உறுதியாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர், ஜப்பான் பிரதமர் ஆகியோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். 2025ம் ஆண்டு குவாட் மாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்றார்.
இதன்பிறகு பிரதமர் மோடி உள்ளிட்ட 4 பேரும் ஒன்றாக இணைந்து புற்றுநோய் மூன்ஷாட் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘’இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மலிவு விலையில் தரமான, அனைவரும் அணுகக்கூடிய மருத்துவ சேவையை உறுதி செய்கிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட சவால்களை தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஏனெனில் புற்றுநோய் சிகிச்சைக்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இந்தியா அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயை குணமாக்க இந்தியா தடுப்பூசி தயாரித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கர்ப்பப்பை புற்றுநோயை குணமாக்க புதிய சிகிச்சை நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளோம். இந்த நோய்க்கான சிகிச்சைகள் குறித்து அனுபவம் மற்றும் மருத்துவர்களின் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை ஒரே பூமி, ஒரே சுகாதாரமாகும். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சைக்காக 7.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள முகக்கவச கருவிகள், கண்டறிதல் கருவிகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். கதிரியக்க சிகிச்சை மற்றும் திறன் மேம்பாட்டிலும் இந்தியா ஒத்துழைக்கும்’’ என்று கூறியுள்ளார்.
புற்றுநோய் மூன்ஷாட் நிகழ்வுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






