Ajith: யூரோ கார் ரேஸ்... அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி... ஒருவேளை அப்படி இருக்குமோ..?

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.

Oct 30, 2024 - 19:46
 0
Ajith: யூரோ கார் ரேஸ்... அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி... ஒருவேளை அப்படி இருக்குமோ..?
அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோ அஜித்குமார், விடாமுயற்சி, குட் பேட் அக்லி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிஸியாக காணப்படுகிறார். இதில் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது, அதேபோல், குட் பேட் அக்லி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இதனிடையே மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க முடிவு செய்துள்ள அஜித், அதற்கான பயிற்சிகளிலும் பிஸியாக காணப்படுகிறார். அடுத்தாண்டு நடைபெறும் யூரோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக துபாயில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள அஜித்துக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும் நண்பருமான அஜித்குமாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். மேலும், நமது தமிழ்நாடு அரசின் (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட், பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்துக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக நன்றி என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் – Formula 4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித்துக்கு எங்கள் அன்பும் நன்றியும் எனத் தெரிவித்துள்ளார். விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார் பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். கடந்த ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி திடீரென வாழ்த்துத் தெரிவித்துள்ளது அரசியல் ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய விஜய் திமுகவையும் உதயநிதி ஸ்டாலினையும் மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் மாநாட்டுக்கு முன்னர் புதுவையில் உள்ள அஜித்தின் பண்ணை வீட்டில் தான் விஜய் தங்கியிருந்ததாகவும் செய்திகள் வைரலாகின. அரசியல் கட்சி தொடங்கியது முதலே ரஜினி, அஜித் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் குறித்து விஜய் அவ்வப்போது பேசி வருகிறார். 

அதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அஜித் ரசிகர்களும் அதிகளவில் பங்கேற்று இருந்தனர். இதனால் அஜித் ரசிகர்களின் வாக்குகளை கார்னர் செய்வதற்காக தான் அவருக்கு உதயநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், விஜய்க்கு கோபம் வருவதற்காகத்தான் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக் கூறினாரா? எனத் தெரியவில்லை என கொளுத்திப் போட்டுள்ளார். உதயநிதி மட்டுமில்லாமல் திமுக பிரபலங்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow