TVK Vijay: பாஜக போல திமுக அரசும் பாசிசம் தான்... விஜய் சொன்னது சரி... ஜெயக்குமார் தக் லைஃப்!
மத்திய அரசை போன்று திமுக அரசும் பாசிசம் தான்; பாசிசம் அல்லாமல் பாயாசமா? நடிகர் விஜய் கூறியது சரிதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசியம், தெய்வீகம் இரண்டும் இரு கண்கள் என வாழ்ந்து மறைந்தாலும், முத்துராமலிங்கத் தேவரை பொருத்த வரையில் கல்வியும் வீரமும் கல்வியும் அனைவரும் பெற வேண்டும். கல்வி பெறுவதோடு இல்லாமல் வீரத்தோடு இருக்க வேண்டும் என்கின்ற வகையில் திண்ணை பிரச்சாரம் மூலம் எடுத்துரைத்தார். அதன் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு இளைஞர்களை அதிகமான அளவுக்கு ஈடுபடுத்தியவர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பொருத்தவரை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக கூட போராடியவர் என சொன்னால் மிகையாகாது. மொத்தம் ஒன்பது இடங்களில் மாநகராட்சி விளையாட்டு திடல் தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் விளையாட்டுத் துறைக்கே சாபக்கேடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் விளையாட்டு வீரர்களாக முன்னேறி வருகின்றனர். இந்த செயலின் காரணமாக அவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் இந்த முடிவு காரணமாக விளையாட்டு வீரர்களின் திறமைகளை மழுங்கடிக்கக் கூடிய துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஆட்சி காலத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கும் பொழுது முன்னதாகவே மீனவர்களுக்கு உதவி தொகை வழங்குவது வழக்கம். ஆனால் திமுக ஆட்சியில் இது வழங்கப்படுவது இல்லை. மு.க ஸ்டாலினுக்கு அவருடைய தந்தைக்கு நினைவிடம் கட்ட பணம் இருக்கிறது, பேனா சின்னம் கட்ட பணம் இருக்கிறது. ஆனால் மீனவர்களின் சேமிப்பு பணத்தை உதவித் தொகையாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு வழங்க பணம் இல்லையா? இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தவெக மாநாட்டில் விஜய் கூறியது சரிதான். மத்திய அரசு பாசிசத்தை நோக்கி செல்லும் போது, மாநில அரசும் பாசிசம் அல்லாமல் பாயாசமா? என விஜய் சரியாக தான் கூறியுள்ளார். திமுக அரசை எதிர்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். திமுகவினரால் எதிர்க் கட்சிகள் ஒடுக்கப்படுகிறது, இது பாசிசம் இல்லையா?
அனைத்துவிதத்திலும் ஜனநாயக விரோத செயலை செய்து அதன் மூலம் பத்திரிக்கையாளர்கள், விவசாயிகள் ஆகியோர்களை திமுக அரசு ஒடுக்கி வருகிறது. தலைவர் எம்ஜிஆர் உலகம் முழுவதும் இரவா புகழாக உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி துவங்கும் பொழுது அவரது முதல் மாநாட்டில் எம்ஜிஆரை பற்றி பேசினார். தற்பொழுது விஜய் அவருடைய மாநாட்டில் எம்ஜிஆரை பற்றி பேசியுள்ளார். இன்றுவரை அவருடைய புகழ் பேசப்படுகிறது ஆனால் கருணாநிதியின் புகழை ஒருவர் கூட பேச பேசவில்லை. அவருடைய கட்சிக்காரர்கள் மட்டுமே அவருடைய புகழைப் பேசி வருகின்றனர் என விமர்சித்துள்ளார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ‘ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் என்ன பாயாசமா என திமுகவை மறைமுகமாக சாடியிருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதேபோல், “பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?