ADMK Ex Minister Ramana To MK Stalin : வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் ரமணா இன்று காட்பாடி விருதம்பட்டு காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா மற்றும் பெஞ்சமின் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ரமணா, “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய அறிக்கையை கொடுத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக எத்தனை படுகொலைகள் நடைபெற்றுள்ளது எனக் கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு எந்த ஆட்சி காலத்தில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ள சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கஞ்சா போதைப் பொருள்கள் கட்டுங்க அடங்காத சென்று கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம் என கூறுவது பொய்யான கருத்து. அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஒரே தடவை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஷாக் அடிக்கிறது எனக் கூறினார். இன்றைக்கு ஷாக் அடிக்க வில்லையா?
தொடர்ந்து மூன்று வருட திமுக ஆட்சியில் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் வருகிறார்கள். அதன் ஒரு சாக்குபோக்கு தான் உதய் மீன் திட்டத்தை பற்றி குறை கூறுகிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என்பதுதான் எதார்த்தமான உண்மை.
ஓபிஎஸ் எல்லா நிலைகளிலும் அவரோடு நிலைப்பாட்டை இழந்து தோல்வியடைந்து இன்று நின்று கொண்டிருக்கிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து, எப்பொழுது பலாப்பழ சின்னத்தில் நின்றாரோ, அப்போதே தார்மீக உரிமையை முழுமையாக இழந்துவிட்டார்.
அதிமுக அலுவலகத்தை உடைத்தது அதன் பிறகு இரட்டை இலை முடக்குவதற்காக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களின் நாடினார். எல்லா நிலைகளிலும் அதிமுகவிற்கு எதிர்ப்பு நிலை எடுத்து, இன்றைக்கு நிராயுதபாணியாக தெருவிலே நின்று கொண்டிருக்கிறார். இதுதான் எதார்த்தமான உண்மை.
மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய குற்றத்தின் மீது பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் பொழுது, அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அந்த கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு சமூக அமைப்புகளும், பிற கட்சிகளும், பொதுமக்களும் சிபிஐ விசாரணை சரியாக இருக்கும் என்று கருதுகிறார்கள். அதுவும் சரியான முடிவாக இருக்கும் என நாங்களும் கருதுகிறோம்.
வேங்கை வயல் விவாகரத்தில் உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியது ஒரு மலத்தை குடிநீர் தொட்டியில் கலந்த விஷயத்தில் இதுவரை ஏன் யாரையும் கைது செய்யவில்லை என உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பு உள்ளது. இது போன்ற நிறைய விவகாரங்களில் உள்ளது. அதில் ஒன்று தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விஷயம்.
இது போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தாமல், இந்த ஆட்சியை தக்கவைக்க வேண்டும், மக்களை ஏமாற்ற வேண்டும், தேர்தலிலே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நிலைபாடுகளை எடுத்தார்கள். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், தேவையான பணிகளை செய்ய வேண்டும், மக்களுக்கு பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இல்லை” என்றார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக ஒரு தகவல் பரவி வருவதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரமணா, ‘ஆமாம் அது நடக்கும் அது தெரிஞ்ச விஷயம் தானே’ என கூறினார்