கர்ப்ப கால மலச்சிக்கலைப் போக்குவது எப்படி? 

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை எப்படிப் போக்குவது என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

Sep 19, 2024 - 13:14
 0
கர்ப்ப கால மலச்சிக்கலைப் போக்குவது எப்படி? 
pregnency

கர்ப்ப காலத்தில் உடல் நலம் சார்ந்து பல்வேறான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். கர்ப்பிணிகள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்று மலச்சிக்கல். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை நமது உணவுப் பழக்கம் வழியாகவே குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்பத்தைத் திட்டமிடும்போதே கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் நமது உணவுப் பழக்கத்தையும் திட்டமிட வேண்டும் என்று சொல்கின்றனர். கர்ப்பகால மலச்சிக்கலைப் போக்குவதற்கான இயற்கையான வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் சித்த வர்ம மருத்துவர் பு.மா.சரவணன்...

‘‘பேறுக்காலத்தில் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது எவ்வளவு அவசியமோ அதே போல் மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் அவசியம். மைதா மாவு மலச்சிக்கலை ஏற்படுத்தும் முக்கியமான உணவுப் பொருள். மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை அறவே தவிர்ப்பது நன்மை தரும். 

பேறுக்காலத்தில் அத்திப்பழம், பேரீச்சம்பழம், மாதுளை, சாத்துக்குடி ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவை மலச்சிக்கலைப் போக்குவதோடு, தாய்க்கு ஏற்படும் ருசியின்மை, ரத்தக்குறைபாடு, சோர்வு ஆகியவற்றை நீக்கி தாய் - சேய் நலத்தையும் மேம்படுத்தும். முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், பீட்ரூட் ஆகியவற்றை நன்கு வேக வைத்து தாளித்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். சீரகம் 25 கிராம், சோம்பு 25 கிராம் அளவில் முக்கால் லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 400 மில்லியாகும் வரை சுண்ட வைத்த பின் 100 மில்லி வீதம் நாளொன்றுக்கு நான்கு வேளை அந்த நீரைக் குடித்து வரலாம். அப்படியாகக் குடித்து வருவதன் மூலம் மலச்சிக்கல் சரியாவதோடு கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீரகத் தாரைத் தொற்று மற்றும் பொய் பிரசவ வலி ஆகியவை ஏற்படாது. அது மட்டுமின்றி சுகப்பிரசவத்துக்கும் வழிவகை செய்யும். 

கீரை வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக மணத்தக்காளிக் கீரை மலச்சிக்கலுக்கு உகந்தது. ஆனால் கீரை எளிதில் செரிமானமாகாது என்பதால் நன்கு மென்று சாப்பிட வேண்டும். உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தலாம். தண்ணீர் குறைவாகக் குடித்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால் தினமும் தாராளமாகத் தண்ணீர் அருந்த வேண்டும்.” என்கிறார் சரவணன்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow