Microsoft: 18 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய மைக்ரோசாஃப்ட்.... சென்னை விமான பயணிகளுக்கு சிக்கல்?
Chennai Airport Flights Cancel Due To Microsoft Issue : மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சேவை 18 மணி நேரத்திற்கு மேலாக முடங்கியதால், உலகளவில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவிருந்த பயணிகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Airport Flights Cancel Due To Microsoft Issue : உலகம் முழுவதும் கணினியின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், ஆன்லைன் சேவைகள் அதிக முக்கியவத்துவம் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் மைக்ட்ரோசாஃப்ட் மென்பொருள் மூலமே இயங்கி வருவதால், அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மில்லியன்கள் ஆகும். நேரடியாகவும் மறைமுகமாகவும் பொதுமக்களின் வாழ்வில் மைக்ரோசாப்ட் மிக முக்கியமான அங்கமாகிவிட்டது. இந்நிலையில், நேற்று முதல் மைக்ரோசாஃப்ட் சேவை திடீரென முடங்கியது.
இதனால் தொழிநுட்ப நிறுவனங்களின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரவுட் ஸ்ட்ரைக் பாதிப்பால் மைக்ரோசாஃப்ட் முடங்கியதாக சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாக, உலகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பயணிகளை அதிகளவில் கையாளக்கூடிய டெல்லி, மும்பை, சென்னை. ராஜஸ்தான் விமான நிலையங்கள், பயணிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றன. மைக்ரோ சாப்ட்வேர் விண்டோஸ் செயலிழப்பு காரணமாக, நேற்று மதியத்திலிருந்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று மதியத்தில் இருந்து, நள்ளிரவு வரையில் மட்டுமே சென்னை விமான நிலையத்தில் இருந்து 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகியுள்ளன. இதனால், சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்று இதுவரை சென்னை வரவிருந்த 8 விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் 8 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாகியுள்ளன. மேலும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, அந்தமான், திருவனந்தபுரம் கொச்சி, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும், 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, நேற்றைவிட இன்று நிலைமை சீரடைந்து உள்ளது. ஆனால் இணையதள சேவை ஒரே சீராக கிடைக்காமல், விட்டு விட்டு வருவதால், இன்றும் பாதிப்பு ஏற்படுகிறது. இணையதள சேவையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்று மதியத்திற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்று நம்புகிறோம். இந்த சிக்கல்கள் சென்னை விமான நிலையத்தில் மட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது மைக்ரோசாஃப்ட் முடக்கத்தால், பயணிகள் கொண்டு வரும் போர்டிங் பாஸ்-ஐ, விமான நிலைய அதிகாரிகள் கையால் எழுதிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரேநேரத்தில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகளை சமாளிக்க முடியாமல், விமான நிலைய அதிகாரிகள் திணறி வருகின்றனர். அதேநேரம் மைக்ரோசாப்ஃட் சிக்கலால் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
சென்னையை போல, மதுரையில் இருந்து 2 விமானங்களும், கோவையில் இருந்து 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பெரும்பான்மையான மக்கள் விமான சேவையை தங்களது அவசர தேவைக்காகவே பயன்படுத்துகின்றனர். இப்படியான சூழலில் மைக்ரோசாப்ஃட் முடங்கியதால் விமான சேவையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மைக்ரோசாப்ஃட் குளறுபடியால் வங்கி சேவையில் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் 10 வங்கிகளில் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.
இதனால் குறிப்பிட்ட அந்த 10 வங்கிகளின் பயனாளர்களும் சில சிக்கல்களை சந்தித்துள்ளனர். மைக்ரோசாஃப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருவதால் உலகின் பல பகுதிகளிலும் அதன் பயனாளர்கள் கவலையில் உள்ளனர். அதேநேரம் இந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மைக்ரோசாப்ஃட் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






