திருவண்ணாமலை போறீங்களா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Sep 17, 2024 - 09:12
 0
திருவண்ணாமலை போறீங்களா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
Special Buses To Tiruvannamalai

சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அண்ணாமலையாரை மனமுருகி வழிபட்டு செல்வது வழக்கம். இன்று பௌர்ணமி என்பதால் திருவண்ணாமலைக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவண்ணாமலைக்கு  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘’பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு, சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 300 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 15 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை, 175 பேருந்துகள் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow