10-ஆம் வகுப்பு மாணவனுடன் 22 வயது இளம்பெண் காதல்.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது
பள்ளி மாணவனை பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்ற இளம்பெண் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 16-ஆம் தேதி தன்னுடைய 15 வயது மகனைக் காணவில்லை என தாயார் புகார் ஒன்றை அளித்தார். தன்னுடைய மகன், பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகவும், ஒழுங்காக படிக்கவில்லை என்பதால் அதே பகுதியில் இளம்பெண் ஒருவரிடம் டியூசன் அனுப்பி வைத்ததாகவும் புகாரில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 16-ஆம் தேதி டியூசனுக்கு சென்ற மகன் திரும்பி வரவில்லை என அம்மாணவனின் தாயார் புகார் கொடுத்துள்ளார். புகார் குறித்து எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸாருக்கே அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, அந்த மாணவன், டியூசன் ஆசிரியையின் தங்கையான 22 வயது இளம் பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தெரிந்த மாணவனின் பெற்றோர் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டியூசன் ஆசிரியையின் தங்கை மீது புகார் கொடுத்துள்ளனர். அப்போது மாணவனின் பெற்றோரும், டியூசன் ஆசிரியையின் தங்கை மற்றும் அவரது பெற்றோரும் சமாதானமாக செல்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து 15 நாள்களில் மீண்டும் சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 16-ஆம் தேதி டியூசன் ஆசிரியையின் தங்கையும், பள்ளி மாணவனும் ஒன்றாக பாண்டிச்சேரி சென்றது தெரிய வந்தது. பின்னர் அவர்களே வீட்டுக்கு வந்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் இவர்களோடு அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவரும் உடன் சென்றது தெரிய வந்தது. அவரையும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன், டியூசன் ஆசிரியையின் தங்கையையும் உடன் சென்ற கேகே நகரைச் சேர்ந்த ராகுல் ஆகியோரை எம்ஜிஆர் நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பிறகு விசாரணை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அந்த டியூசன் ஆசிரியையின் தங்கை, ராகுலை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
What's Your Reaction?