சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு... ஜாபர் சாதிக்கின் ஜாமின் மனு தள்ளுபடி..!
அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரின் சகோதரர் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26 தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்-கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் இருவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கைது செய்யப்பட்ட தங்களிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு நீதிபதி எழில் வேலவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தள்ளிவைத்தார். தீர்ப்பளித்த நீதிபதி தற்போதைய நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் இருவரும் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து இருவரின் மனுகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?