திமுக எம்.எல்.ஏ மீதான வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
திமுக எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதி பெறாமல் தேர்தல் விளம்பரம் செய்ததற்காக திமுக எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, கமுதி காவடிப்பட்டி வெள்ளைச்சாமி மணிமண்டபத்தின் சுவற்றில் எந்த வித அனுமதியும் பெறாமல், காதர் பாட்சா பெயரில் கட்சி ரீதியாக விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
அப்போது கமுதி, அருப்புக் கோட்டை சாலையில் ரோந்து பணியில் இருந்த கமுதி காவல் ஆய்வாளர், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக விளம்பரத்தை அகற்ற காதர் பாஷா என்ற முத்துராமலிங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த விளம்பரத்தை அகற்றாமல் இருந்ததால் அவர் மீது பொது சொத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இராமநாத புரம் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.
தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காதர் பாட்சா தரப்பில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றும் தவறான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் வாதம் வைக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, கமுதி சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?