சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பெரம்பூர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பகுதிகளில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக நடைபெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரிடையாக போட்டியிடவுள்ள விஜய், பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கினார்.
இந்த நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்காக டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள விஜய், தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
— TVK Vijay (@tvkvijayhq) July 6, 2024
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்…
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதேபோல், தமிழக காவல்துறையும் உளவுத்துறையும் தோல்வியடைந்து விட்டது எனவும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தனர். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்க்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் மூன்று தடவை எச்சரிக்கை விட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் செம்பியம் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை கும்பல் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி எப்போதும் அவரது ஆதரவாளர்கள் பாதுகாப்புக்காக இருந்ததாகவும், ஆனால் நேற்றிரவு சரியாக திட்டமிட்டு இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.