டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் சர்ச்சை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

Nov 20, 2024 - 01:43
 0
டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதில் சர்ச்சை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் வழங்கலாம்

சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், கடந்த 2004இல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில், சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்க விருதை வழங்கிவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மியூசிக் அகாடமியின் வருடாந்த இசை கச்சேரி சீசனில் ஒவ்வொரு ஆண்டும் ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுவதாகவும், வரும் டிசம்பரில் 98வது ஆண்டு விழாவில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை பாடகர் டி.எம்.கிருஷ்ணா கூறிவரும் நிலையில், இந்த அறிவிப்பு சுப்புலட்சுமியின் தங்களது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

பாடகர் டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கூறிவரும் கருத்துக்களை மலிவான விளம்பரத்துக்காக கூறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசை உலகில் தன் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கிய ஒருவரை எப்படிக் கெளரவிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயிலின்படி, எந்த விதமான விருது வழங்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விருதை டிசம்பரில் நடைபெறும் 98வது ஆண்டு விழாவில், கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுவிற்கு பதிலளித்த மியூசிக் அகாடமி, விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், 2005ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம்தான் விருது வழங்குவதாகவும், இதற்கு மறைந்த பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி்.ஜெயச்சந்திரன், 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என தடை விதித்துள்ளார். அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow