தமிழ்நாடு

மூக்கை நுழைத்த Mrs. மாண்புமிகு? மூடி மறைக்கும் 2 சீனியர்கள்? கடும் அப்செட்டில் தலைமை?

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, சீனியர் மாண்புமிகுகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரால் தலைமை கடும் அப்செட்டாகியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

மூக்கை நுழைத்த Mrs. மாண்புமிகு? மூடி மறைக்கும் 2 சீனியர்கள்? கடும் அப்செட்டில் தலைமை?
மூக்கை நுழைத்த Mrs. மாண்புமிகு? மூடி மறைக்கும் 2 சீனியர்கள்? கடும் அப்செட்டில் தலைமை?

திமுகவின் உட்கட்டமைப்பை பலப்படுத்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றங்களை செய்துக் கொண்டிருக்கும் தலைமையிடம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிக்கல்கள், மற்றும் அதிகாரம் குறித்தான தகவல்களை உளவுத்துறை ரிப்போர்ட்டாக வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சீனியர்கள் வசமுள்ள மாவட்டங்களில் இருக்கும் முக்கிய பிரச்னைகள், அவற்றை கையாளுவது யார்? மற்றவர்களின் தலையீடுகள் இருக்கிறதா? ஜூனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து உளவுத்துறையிடம் திமுக தலைமை விசாரித்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் தான் உடனடியாக மாவட்டச் செயலாளர்கள் மாற்றங்கள் நடப்பதாகவும், குறிப்பாக சீனியர்களின் மாவட்டங்களை பிரித்து அவற்றை தகுதிவாய்ந்த ஜூனியர்களுக்கு கொடுக்க தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்டங்களை பிரிப்பது குறித்த தகவல் லீக்கானதுமே, மாவட்டங்களை பிரிக்க வேண்டாம் என்று தலைமைக்கு மாண்புமிகுகள் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் சீனியாரிட்டியை விட கட்சியின் எதிர்காலம் தான் முக்கியம் என கட்சித் தலைமை உறுதியாக கூறிவிட்டதாகவும் உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

இந்தநிலையில் தான், ஒரு முக்கியமான சீனியர் மாண்புமிகு மற்றும் அவரது மனைவி மீது தலைமை ஏகத்துக்கு அப்செட்டில் உள்ளதாக அறிவாலய பட்சி கூறுகின்றது. 

அதாவது, சமீபகாலமாகவே குறிப்பிட்ட சில சீனியர்கள் மீது மனவருத்ததில் தலைமை இருப்பதாகவும், அண்மையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு காரில் சென்னை திரும்புகையில் கட்சியின் டெல்லி முகம் ஒருவருடன் தலைமை தன் கவலைகளையெல்லாம் கொட்டித் தீர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனியர் மாண்புமிகுகளின் போக்கும், பேச்சும், ஆட்டமும் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் போவதாக வருத்தப்பட்ட தலைமை, “இவங்க பண்றதுக்கெல்லாம் நான் பாவம் சுமக்க வேண்டி இருக்கிறது” என்று குமுறி இருக்கிறதாம். 

அதிலும், குறிப்பிட்ட ஒரு சீனியரின் பெயரைச் சொல்லி, அவரின் மனைவி ஓவராக கட்சி விஷயங்களில் தலையிடுவதாகவும், அம்மாவட்ட எஸ்.பி., கலெக்டர் உள்ளிட்டோருக்கு அவர் அழுத்தம் கொடுப்பதாக சொல்லியும் கோபத்தைக் காட்டினாராம். யார் அந்த மாண்புமிகு என்று உள்விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தபோது, விஜய்யின் வெற்றி மாநாடு நடந்த மாவட்டத்தின் மாண்புமிகுவானவர் தான் என்று கூறினர். தொடர்ந்து பேசிய அவர்கள், அந்த மாவட்டத்தை தலைமை 3 ஆக பிரித்ததோடு, மாவட்டத்தின் மெயின் ஏரியாவை அதிமுகவில் இருந்து வந்தவருக்கு ஒதுக்கியதால் மாண்புமிகு ஷாக்கானதாகக் கூறுகின்றனர். ஏற்கனவே தன் மகனை மாவட்டச் செயலாளராக்கியுள்ள மாண்புமிகு, மாவட்டத்தின் மெயின் ஏரியாவை தன் மகனுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்பட்டது. 

இதையடுத்து, மாவட்டத்தில் இருந்து ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை சென்னைக்கு வரவழைத்த மாண்புமிகு தரப்பினர், அறிவாலயத்தில் தலைமையை சந்தித்து மீண்டும் அந்த மாவட்டத்தின் மெயின் ஏரியாவை கேட்டதாக அறிவாலய பட்சி கூறுகின்றது. ஆனால், தலைமை பதில் ஏதும் சொல்லவில்லை என்பதால், அப்செட் ஆன மாண்புமிகு, எதுவும் பேசாமல் வெளியேறிதோடு, தனது துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் மூடுக்கும் வந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மாண்புமிகுவின் இந்த முடிவை அறிந்தக் கொண்ட தலைமை, பதறிப்போய் ஜெகத்ரட்சகன் மற்றும் எ.வ.வேலு ஆகியோரை அனுப்பி மாண்புமிகுவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியதாம். இருந்தாலும் மாண்புமிகு அதிருப்தியில் இருந்து வெளியே வர முடியவில்லை என்பதால், கொஞ்ச நாட்கள் ஆறப்போட தலைமை முடிவெத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போ ப்பா… போ… என் பொணத்த தாண்டி போ… என்று விஜய் பட காமெடியை போல, எது கேட்டாலும் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மாண்புமிகு மிரட்டுவதால், கட்சி மற்றும் நிர்வாக விஷயங்களில் மனைவி தலையிடுவதை அவர் தடுக்காதது குறித்து கேட்கவும் தலைமை தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், நட்பா? கழகமா? என்று வரும்போது கழகம் தான் முக்கியம் என்று தலைமை முடிவெடுத்துவிட்டதாம். “நண்பன், நண்பன்னு அவரை ரொம்பவே மன்னிச்சிட்டேன். இனியும் அப்படி பார்த்துட்டு இருக்கப்போறதில்லை. அவரால கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பேருன்னா எனக்கு அவர் தேவையே இல்லை” என்று பிரஸ்ஸர் ஆகி இருக்கிறதாம் தலைமை. இதனால் விரைவிலேயே அதிரடி நடவடிக்கைகளை மாண்புமிகு சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். 

அதேபோல், இன்னும் இரண்டு சீனியர் அமைச்சர்கள் தங்கள் துறையில் நடக்கும் பல முக்கிய விஷயங்களைப் பற்றி தனது கவனதுக்கு கொண்டுவருவதில்லை என்று தலைமை வருத்தப்பட்டிருகிறதாம். கலைஞர் குறித்த புத்தக விழாவில் பெருமையாக பேசிய மாண்புமிகுவே இப்படி செய்யலாமா என்று ஒருப்பக்கம் வருத்தப்படும் தலைமை, மீசைக்கார அமைச்சர் சேட்டைகளை தாங்க முடியாமல் பிபி எகிறிப்போய் கிடக்கிறதாம். 

தேர்தல் முடியட்டும், இவர்கள் அனைவருக்கும் ஒரு கச்சேரியை வைத்துவிட வேண்டியதுதான் என்று தலைமை முடிவெடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, சீனியர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் விரைவிலேயே குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.