Hogenakkal Water Level Hike : தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு அபரிமிதமாக பெய்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் உயிர்பெற்று ஓடுகின்றன. அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் பெருவெள்ளம் பெருக்கெடுத்து விவசாயிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து, காவிரி ஆற்றில் உபரி நீரானது வினாடிக்கு கன அடியிலிருந்து நேற்று வினாடிக்கு 21 ஆயிரத்து 523 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப் பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும் காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும் தற்போதைய நிலவரப்படி படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.