Elon Musk X Ban in Brazil : ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியதிலிருந்தே பல்வேறு மாற்றங்களை செய்து வந்தார் எலான் மஸ்க். அதில் முக்கியமான ஒன்று ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார் மஸ்க். இதனால் பிரேசிலுக்கும் எலான் மஸ்க்கிற்கும் நடுவே ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
பிரேசில் நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தோல்வியடைந்த தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லுலா டா சில்வா அதிபராக பதவியேற்பதைத் தடுக்க போல்சனாரோ சதிச்செயலில் ஈடுபட்டாரா என பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே சமயம், X தளத்தில் முடக்கப்பட்டிருந்த கணக்குகளை மீண்டும் எலான் மஸ்க் செயல்பாட்டிற்கு கொண்டுவந்ததால் பெரும் சர்ச்சைகள் வெடித்தன.
இது ஒருபக்கம் நடக்க, மறுபக்கம் பிரேசிலில் கருத்து சுதந்திரம் இல்லை எனவும் எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். அதோடு விடாமல் பிரேசிலில் 'எக்ஸ்' தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள 'எக்ஸ்' அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். இது பிரேசிலுக்கும் எலான் மஸ்க்கிற்கும் நடுவே ஒரு பிரிவினையை உண்டாக்கியது. இதற்கிடையில் பிரேசில் உச்சநீதிமன்றத்தில் 'X' தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் 'எக்ஸ்' தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்வு... இன்று முதல் அமல்!
ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என எலான் மஸ்க் திட்டவட்டமாகக் கூறினார். இதனால் பிரேசில் நாட்டில் 'X' தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிறகு VPN போன்ற சட்டவிரோதமான செயலிகள் மூலம் X தளத்தை உபயோகப்படுத்தும் நபர்களுக்கு 8,874 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 7,44,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.