Toll Hike in Tamil Nadu : நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்தாலும் அதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் தான் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களின் விதத்திற்கேற்ப கட்டணம் வசூலிக்கபடும். அதாவது கனரக வாகனம் என்றால் ஒரு கட்டணமும், இலகுரக வாகனம் என்றால் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
மேலும், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும்போது அங்கு வாகங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால் இதை தவிர்க்க, தற்போது பாஸ்ட் டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த டோல்கேட் கட்டணத்தை பொறுத்தவரையில் ஆண்டுக்கு 2 முறை என ஏப்ரல் மாதத்தில் ஒருமுறையும், செப்டம்பர் மாதத்தில் ஒருமுறையும் மாற்றியமைக்கப்படும்.
அதன்படி, நடப்பாண்டில் மக்களைவை தேர்தல் நடந்ததால், ஏப்ரல் மாத்ததில் மாற்றியமைக்கப்பட இருந்த சுங்கக்கட்டணம் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் அல்லது அந்த நெடுஞ்சாலைகளை அமைக்க செலவு செய்யப்பட்ட முதலீட்டை திரும்ப எடுக்கும் வரை முழுமையான சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், அதன் பிறகு பராமரிப்புக்கு செலவான குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது பொதுவான விதி.
தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில், கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அந்த காலக்கெடுவை தாண்டி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், சுங்கக் கட்டணம் வசூல் தொடர்கிறது. இதனால், சுங்கச்சாவடி கட்டணம் என்பது பொதுமக்களின் மேல் ஏற்றும் சுமை என்ற குற்றம்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 1) முதல் தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சலாம் தேஸ்பூர் ~ தீரா உலா - 5 Dirang to tezpur
இதன்படி, வாகனங்களுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்ந்து, கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை உண்டாகியுள்ளது.