Dirang to Tezpur Tour - Theera Ulaa 5 : டிராங் பௌத்த மடாலயத்துக்கு வெளியே ஆகாஷ் காத்திருந்தான் என்பதால் மடாலயத்தினுள் என்னால் நிதானமாக உலவ முடியவில்லை. நீண்ட நேரம் அவனைக் காத்திருக்க வைக்கக் கூடாது என்கிற உள்ளுணர்வு என்னை துரிதப்படுத்தியது. ஆகவே புத்தர் முன்பு சிரம் தாழ்ந்து வணங்கி விட்டுக் கிளம்பி விடுவதென்கிற முடிவில்தான் உள்ளே சென்றேன். இந்த மடாலயத்தின் அமைவிடமே இதற்குக் கூடுதலான அழகைக் கொடுக்கிறது. டிராங் சமவெளியில் இருந்து இந்த மடாலயம் ஒரு மலை மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. மடாலயத்தின் பின்புறத்தில் எழுந்து நிற்கும் மலைகளின் காட்சி இயற்கையின் பேரமைதியாய்த் தெரிந்தது. இந்த மடாலயம் 2017ம் ஆண்டு தலாய் லாமா வால் புணரமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இதன் பொலிவு சற்றும் மங்காமல் இருந்தது. இம்மடாலயம் ‘துப்சங் தர்கியேலிங்’ என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. ‘புத்தரின் பேச்சு மலர்ந்த இடம்’ என்பதே இதன் பொருள். பௌத்த மடாலயங்கள் எப்போதுமே கலைகள் திகழும் தலமாகவே இருக்கும். பௌத்தக் கோயில்கள் கட்டடக்கலையில் உச்சம் தொட்டவை என்பதை நாம் வரலாற்றில் காணலாம்.
இன்றைக்கு பௌத்தத்தில் ஓவியக்கலையின் ஆளுகை மிகுந்திருக்கிறது. பௌத்த மதத் தத்துவங்கள், தொன்மக்கதைகள் எல்லாம் ஓவியங்களாய் தீட்டப்பட்டிருக்கின்றன. புத்த விகாரின் முன் சென்றதும் இரு கைகளையும் முன்னே பிணைத்தபடி நின்று புத்தனைப் பார்த்தேன். நான் எடையற்றதைப் போல உணர்ந்தேன். என் அகங்காரங்களையெல்லாம் புத்தனின் காலடியில் கொட்டி விட்டு நிற்பவனைப் போல எனக்குள் பேரமைதி. சலனமற்றவனாய் புத்தரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். எந்த மதத்தலங்களுக்குச் சென்றாலும் இதே உணர்வுதான் எனக்குள் மேலெழும். கடவுள் மறுப்புக் கொள்கையுடைய தகப்பனுக்குப் பிறந்திருந்தாலும், சிறு வயதில் தீவிர நாத்திகனாக வளர்ந்திருந்தாலும் இன்றைக்கு நான் வந்தடைந்திருப்பது கடவுளை தர்க்கங்களுக்குள் கொண்டு செல்லாமல் அதை உணர்ந்தாலே போதும் என்கிற நிலை. கடவுளை ஒரு குறியீடாகக் கருதுகிற நிலைக்கு நான் என்று வந்தேனோ அப்போதே எனக்குள் இருந்த விலக்கங்கள் எல்லாம் உடைபட்டு விட்டது. புத்தர் சிலைக்கு முன்பாக தலாய் லாமாவின் அமர்ந்த நிலையிலான புகைப்படம் வடிவாக வெட்டி நிறுத்தப்பட்டிருந்தது. நம் சம காலத்தில் வாழும் ஒரு மதத் தலைவர். அவரையும் வணங்கி விட்டுக் கிளம்பினேன்.
ஆகாஷும் நானும் டிராங்கிலிருந்து தேஸ்பூர் நோக்கிக் கிளம்பினோம். இன்றைக்கு எப்படியும் தேஸ்பூரை அடைந்து விடுவோம் என்பது உறுதிதான் என்றாலும் என்னை தேஸ்பூரில் இறக்கி விட்ட உடனேயே கேங்டாக் கிளம்பத் தயாராக இருந்தான் ஆகாஷ். பருவ நிலை, சாலை என எல்லாமும்தான் பயண நேரத்தைத் தீர்மானிக்கின்றன. தேஸ்பூர் சென்ற பிறகு அடுத்த கட்டத் திட்டத்தை வகுத்துக் கொள்ளும்படி ஆகாஷிடம் சொன்னேன். பனியின் காரணமாக பைக்கின் சங்கிலி இறுகி விட்டபடியால் ஒரு கட்டத்தில் வண்டி ஓட்ட சிரமப்பட வேண்டியிருந்தது. ஆகாஷ் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு ஸ்பிரே ஒன்றை எடுத்து சங்கிலியில் தெளித்த பிறகுதான் அது இயல்புக்குத் திரும்பியது. எல்லாவற்றுக்கும் தேவையான தயாரிப்புடன் ஆகாஷ் வந்திருந்தான். தவாங் பயணத்துக்கு ஜெர்க்கின் கூட இல்லாமல் வந்த எனக்கு இது ஆச்சரியம்தான்.
தேஸ்பூரை நாங்கள் அடைந்த போது மாலை 5 மணியைத் தாண்டி விட்டது. ஆகாஷ், என்னை இறக்கி விட்டு விட்டு உடனேயே கிளம்ப வேண்டும் என்கிற தவிப்புடனே இருந்தான். தேஸ்பூர் நண்பன் அபினவ் நாங்கள் அனுப்பிய பேக் பேக்குகளை வாங்கி வைத்திருந்தான். அவன் பணியாற்றும் கல்லூரியின் அருகே உள்ள காபி கடையில் சந்தித்தோம். கிளம்பத் துடிக்கிற ஆகாஷை அபினவ் சற்றுக் கட்டுப்படுத்தினான். ‘இத்தனை தொலைவு வண்டியில் வந்தது களைப்பாக இருக்கும் என்பதால் எங்களது வீட்டில் தங்கி விட்டு அடுத்த நாள் காலையில் கிளம்புங்கள்’ என அபினவ் சொல்லவே நானும் அதை வழிமொழிந்தேன். மறுக்கவே முடியாத நிலையில் ஆகாஷ் ஒப்புக்கொள்ளவே அபினவ் வீட்டுக்குக் கிளம்பினோம். அபினவ் உடைய பெற்றோர் எங்களை பெரும் நெகிழ்வோடு வரவேற்றனர்.
கடந்த ஆண்டு வந்த போது அவ்வீட்டின் மேல் தளத்தில் கட்டடப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்போது அது நிறைவுற்று நான்கு அறைகள் எழுப்பட்டிருந்தது. அவற்றில் ஓர் அறையை எங்களுக்குத் தந்தான் அபினவ். அங்கு நாங்கள் மூவரும் பயணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆகாஷின் பைக் பயண அனுபவத்தை அபினவ் பேராவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான். பும்லா பாஸுக்கு பைக்கில் சென்ற அனுபவத்தை ஆகாஷ் சொல்லிக் கொண்டிருந்தான். ஆகாஷுக்கு இந்தி தெரியும் என்பதால் அவனால் அபினவுடன் எளிதாக உரையாட முடிந்தது. காலை எழுந்ததும் ஆகாஷ் கேங்டாக் கிளம்பி விடுவதாகச் சொன்னான். அபினவ் என்னை அவன் பணியாற்றும் டர்ரங் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி விட்டுக் கிளம்பினான். எந்த இடையூறுமில்லாத தூக்கம் ஒன்றே அப்போதைக்குத் தேவைப்பட்டது. காலை எழுந்திருக்கத் தாமதமாகும் என்பதால் தூங்கும் முன்பே ஆகாஷுக்கு கைகொடுத்து, அவனுக்கு விடை கொடுத்தேன். மூன்று நாள் பழக்கத்திலேயே எனக்கு மிகவும் அணுக்கமானவனாய் என்னுள் ஒட்டிக் கொண்டான் ஆகாஷ். எப்படி அபினவ் எனக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறானோ அதைப்போலவே.
அடுத்த நாள் காலை பேச்சொலி கேட்டு எழுந்தேன். அறையை விட்டு வெளியே வந்து பார்க்கையில் கீழே ஆகாஷ் தனது பைக்கில் அமர்ந்து கிளம்பத் தயாராக இருந்தான். அவனிடம் அபினவும் அவனது தாய், தந்தையரும் பேசிக் கொண்டிருந்தனர். நான் கீழே சென்றதும் ‘பரவாயில்லையே... எழுந்துட்டீங்களே’ என்று சொன்னபடி அபினவ் சிரித்தான். ஆகாஷை கட்டியணைத்து விடை கொடுத்த பிறகு அவன் புறப்பட்டான். நாங்கள் ஒரு குடும்பமாக நின்று அவனை வழியனுப்பியதை அவனும் என்றைக்கும் நெகிழ்வோடு நினைத்துப் பார்ப்பான். கல்லூரிக்குக் கிளம்பலாம் குளித்துத் தயாராகுங்கள் என அபினவ் சொல்லவே நான் மேலே அறை நோக்கிப் போனேன்.
உலவித் திரிவோம்...
கி.ச.திலீபன்