சாதி மறுப்பு திருமணம்: 15 வயது சிறுமி கொலை செய்த மாமனார்.. பழி தீர்க்க மாமியாருக்கு வெட்டு..
சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தை, மகளுடைய கணவரின் 15 வயது தங்கையை கொடூரமாக கொலை செய்த நிலையில், மாமியாரை தெருக்களில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே ஏரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த பட்டியலின இளைஞர் சுபாஷ் என்பவரும், சத்தியமங்கலம், காந்தி நகரை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மஞ்சு எனும் இளம்பெண்ணும் கடந்து மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சாதியப் பாகுபாடு காரணமாக பெண் வீட்டார் இவர்களது காதலை ஏற்கவில்லை. இந்நிலையில் 9 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், இதை பொறுத்துக்கொள்ள முடியாத மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா ஆகியோர் சுபாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி சுபாஷ் தனது தங்கை ஹரிணியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது வேனைவிட்டு மோதியதில் சுபாஷூக்கு காலில் பலத்த காயங்களும், ஹாசினிக்கு தலையில் பலத்த ரத்த காயமும் ஏற்பட்டது.
இதனையடுத்து, இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹாசினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பவானிசாகர் போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாகி, ஊட்டியில் பதுங்கி இருந்த சந்திரன் மற்றும் அவரது மனைவி சித்ராவை கையும், களவுமாக பிடித்தனர்.
மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அம்மாசைக்குட்டி, காரின் உரிமையாளரான ஜெகதீஷ் சித்ராவின் உறவினரான கோவை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் சந்திரனின் உறவினரான அன்னூர் அல்லிக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்த ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆனால், இந்த வழக்கில் சித்ரா நிபந்தனை ஜாமீன் பெற்று தினமும் ராமநாதபுரத்தில் உள்ள நகர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் கையெழுத்திட்டு வருகிறார். இதற்காக, ராமநாதபுரத்தில் கேணிக்கரை என்னும் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மதியம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுபாஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இருவர் வாளால் தலை, மணிக்கட்டு, விரல் பகுதிகளில் மாமியார் சித்ராவை துரத்தி துரத்தி வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த சித்ரா முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து வந்து ராமநாதபுரத்தில் மாமியாரை வாளால் வெட்டிவிட்டு தப்பிய சுபாஷ் உட்பட மூவரை ராமநாதபுரம் பஜார் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
What's Your Reaction?