சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
2025-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தைக் கண்டித்து ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், ‘டங்க்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்’ என்ற சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றும் அவைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதையடுத்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிபிஐ விசாரணையில் பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால் நடத்தப்பட்டதாக தெளிவாக சொல்லிவிட்டனர். பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி தான். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய சார்கள் தான் பேட்ச் அணிந்து கொண்டு அமர்திருக்கிறார்கள்.
இதுபோன்ற 100 சார் கேள்விகளை அதிமுகவை நோக்கி என்னாலும் கேட்க முடியும். அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் போது பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பொள்ளாச்சி விவகாரம் குறித்து முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தோம். ஆனால், கவன ஈர்ப்பு தீர்மானமாக ஏற்றார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் அவர் திமுக முக்கிய தலைவர்கள் உடன் இருந்த புகைப்படங்களும் வெளிவந்தது.
குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் முதல் தகவல் அறிக்கை வெளியிடக்கூடாது. ஆனால், வெளிவந்துள்ளது. இதற்கு மத்திய அரசை குற்றம்சாட்டி பொறுப்பை தட்டி கழிக்கிறார். தொடர் சம்பவங்களை பார்க்கும்போது சந்தேகம் எழும்புகிறது. அந்த பெண் சார் ஒருவரிடம் இருக்குமாறு ஞானசேகரன் கூறியதாக தெரிவித்தார். ஆனால், காவல்துறையினர் இந்த வழக்கில் ஒருவர் தான் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. அமைச்சர்கள் பதட்டத்தில் பேசுகின்றனர். பொள்ளாச்சி விவகாரத்தை எடுத்துரைத்து பேசுகிறார். இதனை ஏற்க்காமல் வெளிநடப்பு செய்தோம். யார் அந்த சார்? என்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
What's Your Reaction?