டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
மூன்றாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தைக் கண்டித்து ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், ‘டங்க்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்’ என்ற சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட வெள்ளை மாஸ்க்கும் அணிந்து சட்டசபைக்கு வந்தனர். தொடர்ந்து, மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், மதுரை மேலூர் அருகே அமைக்கப்படவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நெஞ்சுரப்போடு இதனை அறிவித்தவர் தமிழ்நாடு முதல்வர். மேலும் அனைவரின் ஒத்துழைப்போடு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட மாட்டாது என்ற ஒரு தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு முக்கிய காரணம் அதிமுக தான்.
மாநிலங்களவையில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான விவாதத்தில் அதிமுக எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. திமுக அரசு எல்லா வகையிலும் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து யாராலும் கூற முடியாது. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் போது அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர் தான் முதல்வர். அமைக்க மாட்டேன் என்று சொன்னது மட்டுமல்ல நான் முதலமைச்சராக இருக்கும் வரையில் அனுமதிக்க மாட்டேன் என நெஞ்சுரத்தோடு அறிவித்தார்.
அனைவருடைய ஒத்துழைப்போடு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். இந்த பிரச்னைக்கு மூலக்காரணம் யார் என்று பார்த்தால், பிரதானமாக இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான்.மாநில அரசின் ஏல நடைமுறையை மாற்றி, மத்திய அரசு தன் கையில் எடுத்துக் கொள்ளும் சட்டம் கொண்டு வரும் போது அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்ததது தான் மூலக்காரணம்.
தமிழக அரசின் எதிர்ப்பை மீறியும் மத்திய அரசு ஏல நடவடிக்கையை தொடர்ந்து இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஏலத்தை வழங்கிய போதும் எதிர்த்தது திமுக அரசு தான். சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்த பின்பும் கூட அதிமுக அதில் அரசியல் ஆதாயம் தேடி குளிர்காய நினைக்கின்றனர். அதுவரை மாநிலத்தின் உரிமையாக இருந்ததை மத்திய அரசு எடுத்துக் கொண்டது. மாநில உரிமைகளை மீறி மத்திய அரசு எடுத்துக் கொண்டதை ஆதரித்ததுதான் இந்த பிரச்னைக்கு மூலக்காரணம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய தமிழக அரசை அனுமதி கொடுக்கவில்லை என சொல்கிறீர்கள். தமிழ்நாடு அரசு ஒருபோதும் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கவே வழங்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை ஒரு பிடி மண்ணை கூட எடுப்பதற்கு நிச்சயமாக தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. நீங்கள் செய்த தவறை மறைப்பதற்காகவே அதிமுகவினர் முகக்கவசம் அணிந்து வந்திருக்கிறீர்கள் என்று கூறினார்.
What's Your Reaction?