ஒரு வீட்டில் இரண்டு மின் இணைப்பு உள்ளதா?.. மின்சாரத் துறை எடுத்த அதிரடி முடிவு!
ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின் கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மாதம் மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு யூனிட் ஒன்றுக்கு 4.60 காசில் இருந்து, 4.80 காசுகளாக உயர்த்தப்பட்டது. 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே 6.15 காசு பெறப்பட்டு வந்த நிலையில் 6.45 காசாக உயர்த்தப்பட்டது. இதேபோல் 501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8.15 காசில் இருந்து 8.55 காசாக உயர்த்தப்பட்டது.
இந்த மின் கட்டண உயர்வு மூலம் தமிழ்நாட்டில் விலையில்லா மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இதை மறுத்த தமிழ்நாடு அரசு, அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்து இருந்தது.
இந்நிலையில், ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின் கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் கணக்கீடு செய்யும் புதிய நடைமுறை சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதை தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் நடைமுறைப்படுத்த மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ’’ஒரு வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் இருந்தால் இரண்டு இணைப்புகளும் தலா 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுகின்றன. கணக்கெடுப்பின்போது இவை கண்டறியப்பட்டு 100 யூனிட் இலவசர மின்சாரம் போக, மீதி மின் நுகர்வுக்கு கட்டணம் வசூலிக்கபடும்’’ என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
What's Your Reaction?