நெஞ்சைப் பதற வைக்கிறது... தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முதல் கோரிக்கை!

கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

Dec 3, 2024 - 07:14
 0
நெஞ்சைப் பதற வைக்கிறது... தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முதல் கோரிக்கை!
நெஞ்சைப் பதற வைக்கிறது... தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முதல் கோரிக்கை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில், கனமழை வெளுத்து வாங்கி வந்தது. அப்போது டிசம்பர் 1ம் தேதி, அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.

இதில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. இதில் அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் சிக்கினர். இந்நிலையில் தீவிர போராட்டத்திற்கு பின்னர் நேற்று (டிச. 2) 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. பாறை விழுந்ததில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் உருக்குலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பேசிய தவெக தலைவர் விஜய், “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow