போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு-நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதும், நண்பர்களுக்கும் வாங்கி விற்பனை செய்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஜெ.ஜெ. நகர், பாரி சாலை, இ.பி பூங்கா அருகே கடந்த மாதம் 3-ம் தேதி இரவு, போதைப் பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கார்த்திகேயன் என்பவரை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 LSD ஸ்டாம்ப், போதைப் பொருளும், மூன்று கிராம் OG கஞ்சாவும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 'ரெடிட்' ஆன்லைன் ஆப் மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தி வந்ததோடு, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் படி, மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல், மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத், ஆருணி உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 94 'எல்.எஸ்.டி ஸ்டாம்ப்', 48 'எம்.டி.எம்.ஏ' போதை மாத்திரை, 700 கிராம் ஓ.ஜி கஞ்சா, ஐந்து செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டபோது, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் தொடர்ச்சியாக பேசி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேரை அண்ணா நகர் துணை ஆணையர் தனிப்படை போலீசார், ஜெ.ஜெ நகர் காவல் நிலையம் அழைத்து வந்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், அலிகான் துக்ளக், கார்த்திகேயனிடமிருந்து ஓ.ஜி. கஞ்சா போன்ற போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. குறிப்பாக மருத்துவ பரிசோதனை அடிப்படையில் நிரூபணமாகி உள்ளது. மேலும் துக்ளக் அலிகான் அவரது நண்பர்களுடன் இணைந்து பிற நண்பர்களுக்கும் வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்களான புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சையது ஷாகி, புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் அலி, புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாசில் அஹமது, குமரன், முகேஷ் , சந்தோஷ் என மொத்தம் 7 பேரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெ.ஜெ நகர் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அலிகான் துக்ளக் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் மன்சூர் அலிகான் இயக்கத்தில் வெளியான, "கடமான்பாறை" படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
What's Your Reaction?