பிரச்சனையை தீர்க்கவில்லை.. எங்களை தாக்குகிறது பாஜக - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் பாஜக பிரச்சனைகளை தீர்க்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

Dec 1, 2024 - 14:12
 0
பிரச்சனையை தீர்க்கவில்லை.. எங்களை தாக்குகிறது பாஜக - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பு.

மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். விரைவில் டெல்லியில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இதையடுத்து, தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் மீது திரவம் ஒன்றை வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மர்ம நபரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது, டெல்லியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. மத்திய அரசும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்  அலட்சியமாக இருந்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர்  பிரவீன் ஷங்கர் கபூர் பேசியதாவது, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வொரு அரசியல் வியூகமும் தோல்வியடைந்ததால் அவர் பழைய தந்திரங்களுக்கு திரும்பியுள்ளார். அதில், ஒன்று தான் இந்த திரவ வீச்சு. கைது செய்யப்பட்ட நபரை விசாரித்து உண்மையை கண்டறியுமாறு டெல்லி காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் சட்டம் ஒழுங்கு தொடர்பான குற்றச்சாட்டிற்கு எதிராக  அமித்ஷா நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக என் பாதயாத்திரையின் போது நான் தாக்கப்பட்டேன் என்று கூறினார். மேலும், உங்களால் முடிந்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுங்கள் எங்களை ஏன் தாக்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் பகுதிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றபோது, மாணவர் ஒருவர் அவர் மீது மை வீசிய சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow