உணவு டெலிவரி போல் போதைப்பொருள் டெலிவரி... சென்னையில் அதிர்ச்சி!
ராஜஸ்தானில் இருந்து ஓபியம் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்த கண்ணாடி கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சவுகார்பேட்டை எடப்பாளையம் தெருவில் நகைப்பட்டறை ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக யானைக்கவுனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது தினேஷ் சவுத்ரி என்பவரது நகைப்பட்டறையில் ஓபியம் என்ற போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகளான பாரிமுனையைச் சேர்ந்த சிங், தாம்பரத்தைச் சேர்ந்த பிரேம் பிரகாஷ் ஆகியோரையும் கைது செய்தனர். தினேஷிடம் இருந்து 15 கிராம் ஓபியம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் பின்பு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைதான பிரேம் பிரகாஷ் என்பவரிடம் இருந்துதான் தினேஷ் வாங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பிரேம் பிரகாஷ் தாம்பரத்தில் கண்ணாடி விற்பனை கடை நடத்தி வருகிறார். அங்கு சென்று சோதனை நடத்தியதில் 1 கிலோ 300 கிராம் ஓபியம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான பிரேம் பிரகாஷ் ஓபியம் போதைப்பொருளை சென்னையில் விற்பனை செய்யும் விற்பனையாளராக இருந்துள்ளார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஓபியம் போதை பொருட்களை வாங்கி வந்து சிறிய பொட்டலங்களாக தயார் செய்து இருசக்கர வாகனம் மூலம் உணவு டெலிவரி செய்வது போல விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து டிஜிட்டல் வெயிட் மிஷின் 2, செல்போன் 4, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான நகைப்பட்டறை உரிமையாளர் தினேஷ், பிரேம் பிரகாஷ், சேத்தன் ஆகியோர் மீது யானைகவுனி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?