சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள்:
மழைக்காலங்களில் நமது உடலில் செரிமான சக்தி சற்று குறைவாகவே காணப்படும். எனவே பாக்கெட்டுகளில் அடைத்த உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக வீட்டிலேயே நல்ல சமைத்த உணவுகளை சாப்பிடுங்கள். குறிப்பாக இந்த மழை நேரத்தில் நீராவியில் வேக வைத்த உணவுகள் அதாவது, இட்லி, இடியப்பம் போன்ற உணவுகள் எளிதில் செரிமானம் ஆகும். இதனால் நீங்கள் அஜீரனத்தை தவிர்க்கலாம். மேலும் உங்களது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் நிறைய காய்கறிகளை உங்களது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
அடிக்கடி கைகளைக் கழுவவும்:
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய முக்கால்வாசி நோய்களைத் தடுக்க கைகளை கழுவுவது மிகவும் அவசியம். அடிக்கடி கைகளை கழுவுதல் மூலம் இந்த பருவத்தில் பரவும் சுவாச நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு அபாயத்தை கணிசமாக குறைக்கும்.
உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் வெளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பின், உடற்பயிற்சி முடிந்த பிறகு, கழிவறையைப் பயன்படுத்திய பின், மற்றும் உணவு உண்பதற்கு முன், கிருமிகளைத் தடுக்க கைகளைக் கழுவுமாறு அறிவுருத்துங்கள்.
அடிக்கடி தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்:
நீரேற்றமாக இருக்கவும் நச்சுகளை வெளியேற்றவும் சுத்தமான, வடிகட்டிய தண்ணீரை நிறைய குடிக்க வேண்டும். தெரியாத மூலங்களிலிருந்து வரும் தண்ணீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அசுத்தமான நீர் இரைப்பை குடல் பிரச்சனைகள் மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்கவும்:
ஈரமான சூழல் பூஞ்சை, பாக்டீரியா மற்றும் பூச்சிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். உங்களது வீடுகளை முடிந்த வரை ஈரப்பதம் இல்லாதவாறு வைத்துக்கொள்ளுங்கள். சுவாச பிரச்சனைகள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்தை குறைக்க உங்கள் வீட்டை உலர்ந்த, சுத்தமாக மற்றும் நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள். இதற்கு தினமும் நீங்கள் சாம்பிரானி புகை போடுவது, ஜன்னல்களை திறந்து வைப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.
கார்பெட்-களை உபயோகிக்க வேண்டாம்:
மழைக்காலங்களில் தரையில் நடக்கும்போதுகூட இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் தங்களது வீடுகளில் கனமான கார்பெட்டுகளை விரிப்பது வழக்கம். ஆனால் இந்த கார்பெட்டுகள் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தண்மைகொண்டவை. இதனால் உங்களது வீட்டின் தரையில் பூஞ்சை, பேக்டீரியா, வைரஸ் உள்ளிட்டவை எளிதாக உற்பத்தியாகக்கூடும். அதில் நீங்கள் கால் வைத்து நடக்கும்போது அவை மூலமாக உங்களுக்கு நோய்வாய்ப்பட அனேக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே மெலிதான, எளிதில் காயக்கூடிய கார்பெட்டுகளை பயன்படுத்துங்கள்.