முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்
வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் உள்ளிட்ட காரணங்களை கூறி மக்களை திமுக அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டபடியால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருந்த கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதன்காரணமாக 2 நாட்களாக பல கிராமங்கள் இருளில் மூழ்கியது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடுர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்த நிலையில், புயல் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும், வெள்ளத்தில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாததால் பல்வேறு கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நேற்று கடலூரில் அரசு சார்பில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்கள் கெட்டுபோயுள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு , வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது.
ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த திமுக அரசு. வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த
இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?