சபரிமலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி.. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் துவங்கியதும் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். 48 நாட்கள் முறையாக விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வார்கள். பெரும்பாலும் மண்டல பூஜை நாட்களிலேயே ஐயப்பன் கோயிலில் அதிகப்படியான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல பூஜை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேரும் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தரிசனம் செய்வதற்காக தனி வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்ப பாதுகாப்பு நடைவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக சபரிமலைக்கு தரிசனம் மேற்கொள்ள செல்லும் பக்தர்கள் பம்பையை அடைய இரண்டு பாரம்பரிய பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒன்று எருமேலி - கரிமலை வழியாகவும், மற்றொன்று சத்திரம் - புல்லுமேடு வழியாகவும் சன்னிதானம் வரை செல்கின்றனர்.
எருமேலியில் இருந்து செல்லும் பக்தர்கள் சாலை வசதியுள்ள கொய்காக்காவ் வழியாக செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சத்திரத்தில் இருந்து சன்னிதானத்திற்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், சபரிமலையில் இருந்து சத்திரத்திற்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சத்திரம், சீதாகுளம், ஜீரோ பாயிண்ட், புல்லுமேடு, கழுதக்குழி ஆகிய இடங்களில் குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை சத்திரம் - புல்லுமேடு கானன பாதை வழியாக செல்லலாம் எனவும் சன்னிதானத்தில் இருந்து மீண்டும் சத்திரத்திற்கு காலை 8 மணி முதல் 11 மணிக்குள் திரும்பலாம் எனவும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?