எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியாது... வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
அரசியல் களத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதற்காக அவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கொடுத்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட நியூ ஆவடி சாலை, காந்தி நகரில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் சிஎம்டிஏ சார்பில் நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் ஜார்ஜ் டவுன் பி.ஆர்.என். கார்டன் பகுதியில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் எடுத்துக் கொண்ட பணிகளை வேகப்படுத்த தொடர் ஆய்வு என்ற வகையில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த வகையில் இன்று வில்லிவாக்கம் காந்திநகர் மற்றும் துறைமுகம் பகுதியில் கட்டப்படும் குடியிருப்பு மற்றும் நுங்கம்பாக்கம் ஹரிங்டன் சாலையில் உள்ள சமுதாய நலக் கூடத்தை இடித்துவிட்டு சமுதாய நல கூடம் கட்டப்படவுள்ள இடம் என பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தோம். ஏழு இடங்களில் திருமணம் மண்டபங்கள் கட்டும் பணி தொடங்க உள்ளது. ராயபுரம் பகுதியில் திருமண மண்டபம் கட்டப்படும் பணி தொடங்கியுள்ளது. மற்ற இடங்களில் ஜனவரி மாதத்தில் தொடங்கி டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
வடக்கு என்ற சொல்லின் மீது உள்ள ஒவ்வாமையால்தான் வட மாவட்டங்களில் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வானதி சீனிவாசனின் கூறியிருக்கிறார். அரசியல் களத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதற்காக அவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் முதலமைச்சரின் பணியைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மழை வெள்ளம் வந்ததிலிருந்து ஓயாமல் முதல்வரும், துணை முதல்வரும், அந்த மாவட்ட அமைச்சர்களும் என அனைவரும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
புயல் எச்சரிக்கை வந்ததிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருமழை வெள்ளத்தின்போது எவ்வளவு பணியாற்ற முடியுமோ அதை முன்கூட்டியே மேற்கொண்டது இந்த அரசு. புயல், மழை, வெள்ளம் வந்த பிறகும் வீட்டில் முடங்கி விடாமல் வீதிக்கு வந்து மக்கள் குறைகளை கேட்டு முழுமையான நிவாரணப் பணியில் ஈடுபடுகின்ற அரசு இது. எதிர்க்கட்சிகள் என்பது எதிரிக்கட்சிகளாக இருக்கக் கூடாது. குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும், நிவர்த்தி செய்ய முதல்வர் தயாராக இருக்கிறார். வெள்ள பாதிப்பால் கோயில்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யச் சொல்லி உள்ளோம். மதிப்பீடு வந்தவுடன் போர்க்கால அடிப்படையில் அவற்றை சரி செய்து பக்தர்களுக்கு அதை அர்ப்பணிக்க உள்ளோம்” என்று கூறினார்.
What's Your Reaction?