விஜய்யை பார்த்து சீமானுக்கு பயம்... அதை வெளிய காட்டிக்கல! - வெற்றிக்குமரன்
நடிகர் விஜய்யைப் பார்த்து, சீமான் பயங்கரமாக பயப்படுகிறார். ஆனால், அதனை அவர் வெளிகாட்டிக் கொள்ளமாட்டார் என நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வெற்றிக் குமரன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வெற்றிக்குமரன், “கடந்த 2009ஆம் ஆண்டு ஈழப்போராட்டத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அரசியல் கட்சியினர் ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை என்பதன் காரணமாக தமிழர்களுக்காகவும், உரிமைகளை பெறவும் தமிழகத்தில் உள்ள எண்ணற்ற இளைஞர்களைக் கொண்டு நாம் தமிழர் கட்சி முதலில் இயக்கமாகவும், பின்னர் 2010ம் ஆண்டு கட்சியாகவும் உருவாகியது. லட்சக்கணக்கான இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைய இணைய கட்சி வளர்ந்தது. கட்சி வளர வளர சீமானின் செயல்பாடுகளில் மாற்றம் வர ஆரம்பித்தது. எதேச்சதிகாரமாக செயல்பட்டார். பல சமயங்களில் உடன்பாடு இல்லையென்றாலும் சில செயல்பாடுகளில் அவரை பின் தொடர்ந்தோம். பொருளாதாரம், குடும்பம், இளமைக் காலம் என எண்ணற்ற இழப்புகளை சந்தித்துள்ளோம்.
சீமானால் தமிழ் தேசியத்தை வெல்ல வைக்க முடியாது. அதற்கான வேலைகளையும் சீமான் செய்யவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் கடந்தாண்டு மாவீரர் நாள் நிகழ்வை நடத்த முடியவில்லை. நாம் தமிழர் கட்சியில் சீமானால் புறக்கணிக்கப்பட்ட அவரது தலைமை பிடிக்காமல் வெளியே வந்தவர்கள் ஒன்றாக செயல்பட உள்ளோம். தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்கிற பெயரில் இயக்கத்தை தொடங்கி உள்ளோம். நவம்பர் 27 ஆம் ஆண்டு வீரவணக்க நாளை நடத்த உள்ளோம். தமிழ்நாடு முழுவதுமிருந்து ஏராளமான உணர்வாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழர்களுக்கான உரிமை, வேலைவாய்ப்பு, வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம்.
நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாளுக்குப் பின்னர் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளோம். நாம் தமிழர் கட்சியின் கொள்கையில் பிரச்சனையில்லை. அதனை செயல்படுத்துவதில்தான் பிரச்சனை. சீமான் தனது கருத்தை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என நினைக்கிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அதன் வளர்ச்சி 20% தொட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. 2026ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி பெரிய வீழ்ச்சியை சந்திக்க போகிறது. நாம் தமிழர் கட்சியில் வளர்பவர்களை சீமான் அனுபதிப்பதில்லை. சீமானுக்கு தன்னம்பிக்கை இல்லை. அதனால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விரும்புவதில்லை. அவர்களை அடக்கி வைக்கவே விரும்புகிறார்.
திமுக, அதிமுகவில் பகுதி சார்ந்த தலைவர்கள்தான் இருப்பார்கள். தொண்டர்களின் வாழ்வியலோடு இருந்தால் மட்டுமே கட்சியில் நீண்டகாலம் தொண்டர்கள் இருக்க வழிவகுக்கும். ஆனால் அவ்வாறு வளர்ந்து வருபவர்களை யாரோ ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்பதற்காக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் கட்சியை விட்டு நீக்கிவிடுகிறார்கள். இப்படி இருந்தால் எவ்வாறு நாம் தமிழர் கட்சி வளர்ச்சியடையும்? நாம் தமிழர் கட்சி வெளியில் இருந்து பார்த்தால் பெரிய அளவிலான கட்சியாக தெரியும். ஆனால் உள்ளே இருந்து பார்த்தால் நாம் தமிழர் கட்சி ஒன்றுமில்லாத கட்சியாகவே தெரியும். சொத்து பாதுகாப்புக்காகவே நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் தனி நபரின் பெயரில் பதிவிடப்பட்டுள்ளது.
வெளியூரில் நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தரும்போது, அப்பகுதியில் இருக்கக்கூடிய கட்சி தம்பிகள் 500, 1000 என்று நிதி திரட்டினால் அந்த நிதியில் நட்சத்திர விடுதியில்தான் எங்களுக்கு அறை ஒதுக்க வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுப்பார். நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்தும், தனது உழைப்பில் இருந்தும் நிதியளிக்கும் நாம் தமிழர் ஆதரவாளர்களுக்கு சீமான் அவமானத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறார். நடிகர் விஜய்யைப் பார்த்து, சீமான் பயங்கரமாக பயப்படுகிறார். ஆனால், அதனை அவர் வெளிகாட்டிக் கொள்ளமாட்டார்” என குற்றம் சாட்டியுள்ளார்.
What's Your Reaction?