அரசியல்

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா: காரசார விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் நிறைவேற்றம்

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பின் மூலம் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா: காரசார விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் நிறைவேற்றம்
வக்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

வக்ஃபு வாரியம் என்பது இஸ்லாமியர்களால் தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும். அதாவது, இஸ்லாமியர்கள் தங்களிடம் உள்ள சொத்துக்களை வக்ஃபு என்ற பெயரில் பாத்தியம் செய்துவிடுவார்கள். இந்த சொத்துகள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி வாசல்கள் அல்லது ஜமாத்துகளின் கீழ் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமாகிவிடும். இந்தியா முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் உள்ள வக்ஃபு வாரிய சொத்துக்களை இஸ்லாமியர்கள் கண்காணித்து வருகின்றனர்

வக்ஃபு சட்டமானது முதலில் 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன் பின்னர், 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வக்ஃபு வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது.

இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தவுடன் இது சட்டமாக மாறும்.

கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு

மாநிலங்களவையில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது, “வக்ஃபு மசோதா மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்படவில்லை. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை” என்று கூறினார்.

தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி சையத் நசீர் உசேன் பேசிய போது, வகுப்புவாத வன்முறையை முன்னெடுக்கும் பாஜக, முழுக்க முழுக்க பொய்களால் நிறைந்த வக்ஃபு மசோதாவை அமலாக்கத் துடிப்பதாக கூறினார்.

மசோதாவின்படி, வக்ஃபு சொத்துக்களை கொடுப்பவரோ அல்லது அதனை நிர்ணயிப்பவரோ ஒரு இஸ்லாமியர் என்பதை சரிபார்ப்பவர் யார் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நதிமுல் ஹக் கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி திருச்சி சிவா பேசிய போது, மீண்டும் மீண்டும் மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வக்ஃபு மசோதா மோசடியானது எனவும் கூறினார். மதச்சார்பின்மை, அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த மசோதாவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களை அழிக்கும் உட்பிரிவுகளைத் தவிர புதிதாக எதுவும் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவில் இல்லை என்றும் இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

வக்பு சட்டத்திருத்தம்

மத்திய வக்ஃபு கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃபு வாரியத்திலும் இஸ்லாமியர்கள் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாமை பின்பற்றுபவர்கள் வக்ஃபுக்கு சொத்துக்களை நன்கொடையாக அளிக்கலாம்.

வக்ஃபுக்கு நன்கொடை அளிப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

3 உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃபு தீர்ப்பாயமும் 2 உறுப்பினர்களாக குறைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.