அரசியல்

"என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு"- ஓ.பி.எஸ் ஓபன் டாக்!

"நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஈபிஎஸ்க்கு நான் ஆதரவு அளித்தது மிகப்பெரிய தவறு" ஓபிஎஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.


O panner selvam
நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், தனது கடந்த கால அரசியல் முடிவுகள் குறித்து முதன்முறையாகப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்குத் தான் அளித்த ஆதரவே தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்சி கவிழ்ந்திருக்கும்: ஓ.பி.எஸ் விளக்கம்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேருடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததை நினைவு கூர்ந்த ஓ.பி.எஸ், "அன்று நான் இபிஎஸ்-க்கு எதிராக வாக்களித்திருந்தால் அதிமுக ஆட்சி அப்போதே கவிழ்ந்திருக்கும். விபத்தின் மூலம் சசிகலாவால் முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு ஆதரவு கொடுத்ததற்காக இன்று நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

அதிமுக கோட்டையில் ஓட்டை

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய ஓ.பி.எஸ், "அதிமுகவின் கோட்டைகளில் ஓட்டை விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டன. எடப்பாடி பழனிசாமியால் இனி எதையும் செய்ய முடியாது. தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு முற்றிலும் சரிந்துவிட்டது" என்று கடுமையாக விமர்சித்தார். திமுகவின் 'திராவிட மாடல்' ஆட்சி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் திறமை ஆகியவற்றைப் பாராட்டிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த பின்னணி

மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் 2022-இல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகும் இபிஎஸ் தரப்பு அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க மறுத்த நிலையில், கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று அவர் முறைப்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தனது மகன் ரவீந்திரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த அவர், தற்போது அக்கட்சியின் வெற்றிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.