சினிமா

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்
மனோஜ் குமார்

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முகத் தன்மை கொண்ட மனோஜ் குமார் தேசப்பற்று மிக்க படங்களில் அதிகம் நடித்துள்ளார். இதனால் இவர் பாரத் குமார் என்று அழைக்கப்பட்டார். கடந்த 1957-ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ’ஃபேஷன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் 'புராப் அவுர் பஸ்ஜிம்’, ’கிரான்டி’, ’ரோட்டி கபட அவுர் மகான்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவருக்கு 1992-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2015-ஆம் ஆண்டு சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்த மனோஜ் குமார் (87) உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

மனோஜ் குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மூத்த நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோஜ் குமார் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தேசபக்தி ஆர்வம் அவரது படங்களில் பிரதிபலித்தது. மனோஜ் குமாரின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டியதுடன் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.