வக்ஃபு வாரியம் என்பது இஸ்லாமியர்களால் தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும். வக்ஃபு சட்டமானது முதலில் 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதன் பின்னர், 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வக்ஃபு வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் எல்லா மாவட்டங்களிலும் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சென்னையில் தவெக போராட்டத்திற்கு 16 இடங்களில் அனுமதி அளித்துள்ள காவல்துறையினர் அனுமதியளிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடைபெறும் பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல்
வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: தவெக போராட்டத்திற்கு அனுமதி.. போலீஸ் வைத்த டுவிஸ்ட்
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெறும் தவெக போராட்டத்திற்கு 16 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.