அரசியல்

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி

40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும் என விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்ததும் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தாவல்.. அப்பாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் கேள்வி
அப்பாவுவின் மனுவுக்கு அக்டோபர் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ள பாபு முருகவேலுக்கு எதிராக மனுதாரர் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை” என்றார்.

அதற்கு பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருந்ததால், கட்சி சார்பில்  அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அதற்கு கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும்’ தெரிவித்தார். 

சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசியல் கட்சி சார்பில் வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தால் தலைவரோ, பொதுச்செயலாளரோ தான் தாக்கல் செய்ய முடியும் என சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “அவதூறு வழக்கை தாக்கல் செய்ய என்ன அடிப்படை உரிமை உள்ளது. 40 எம்.எல்.ஏ.க்களில் எவரும்  வழக்கு தாக்கல் செய்யவில்லை. அப்பாவு தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. உங்கள் கட்சிக்கு அவர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை” எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக கற்பனையாக கூறக்கூடாது என பாபுமுருகவேல் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை பூர்த்தி செய்தது. எவரும் கட்சி தாவவில்லை. சபாநாயகர் பேச்சால் எப்படி அதிமுக-வின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது? எப்படி அவதூறாகும் எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர், சபாநாயகர் அப்பாவுவின் மனுவுக்கு அக்டோபர் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பாபு முருகவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.