IRCTC Ticket Booking Period Days Update News : இந்தியா முழுவதும் மிகப்பெரிய பயணிகள் வழித்தடமாக இருப்பது ரயில்வே மட்டும் தான். கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை பயணிக்கும் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது. குறைந்த விலையில் நீண்ட தூரம் செல்வதற்கு பொதுமக்கள் அதிகம் நம்பியிருப்பது ரயில்வே துறையை தான். ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை, 120 நாட்களுக்கு முன்பு ரிசர்வேஷன் செய்துகொள்ளும் நடைமுறையை இந்திய ரயில்வே பின்பற்றி வருகிறது. இதனால் ரயில்களில் பயணம் செல்ல விரும்புவர்கள், 4 மாதங்கள் அதாவது 120 நாட்களுக்கு முன்பாக தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளலாம்.
அதன்படி, அருகில் இருக்கும் ரயில் நிலையங்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் புக் செய்துகொண்டு பொதுமக்கள் பயணித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதனை 2 மாதங்களாக குறைத்து இந்திய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளும் நாட்களை 120-ல் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இந்த டிக்கெட் முன்பதிவு கால மாற்றம் நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வெளிநாட்டு பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு, 365 நாட்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவுக்கான நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தூரம் பயணிப்பவர்களும், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்களுக்கும் இந்த புதிய முறை ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏற்கனவே பண்டிகை காலங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது.
இப்படியான சூழலில் ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது, பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் வரும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏராளமான பொதுமக்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டனர். அவர்கள் இந்த மாற்றம் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும், முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் அனைத்தும் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.