இப்போ மன்னிப்பு கேட்டு எதுக்கு? பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்! - இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் காட்டம்
நடிகை கஸ்தூரியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது, கைது செய்தவுடன் நீதிமன்றத்தில் மன்னிப்பை கேட்டுக் கொள்ளட்டும் என அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனிச் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, மன்னர்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் என்றும், தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என அவர்களால் எப்படிச் சொல்ல முடியும் என கேள்வி எழுப்பியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்பட்டது.
நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையாகி வரும் நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் பொதுசெயலாளர் நந்தகோபால், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், தமிழகத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மக்கள் சகோதரர்களாக வசித்து வரும் நிலையில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவதூறு பரப்பும் வகையில் பேசிவிட்டு மன்னிப்பு கோரினால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பேசுவதற்கு முன் அது தெரிய வேண்டும். கைது ஆன பின் கஸ்தூரி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்ளட்டும். நன்றாக உழைத்ததால் கட்சியில் பதவி வழங்கியுள்ள நிலையில், தெலுங்கு அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நடிகை கஸ்தூரி பேசி உள்ளார். அவர் மீது தனிப்பட்ட பிரச்சனைகள் ஏதும் இல்லை. தெலுங்கு மக்கள் குறித்து பேசி இருப்பதால் மட்டுமே புகார் கொடுக்க வந்திருக்கிறோம்” என்றார். இதையடுத்து ஏற்கனவே தெலுங்கு மக்கள் குறித்து பேசிய சீமான் மீது புகார் கொடுத்துள்ளதாகவும், நடிகை கஸ்தூரியின் மன்னிப்பை தாங்கள் ஏற்க மாட்டோம் எனவும் வார்த்தைக்கு ஏற்ப தண்டனையை நடிகை கஸ்தூரி அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?