TVK Vijay: மாநாடு, பொதுக்கூட்டம், நடை பயணம்... தவெக தலைவர் விஜய்யின் அடுத்த அதிரடி!

TVK Leader Vijay : கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர், அடுத்தடுத்து சில அதிரடியை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jul 17, 2024 - 21:04
Jul 18, 2024 - 15:51
 0
TVK Vijay: மாநாடு, பொதுக்கூட்டம், நடை பயணம்... தவெக தலைவர் விஜய்யின் அடுத்த அதிரடி!
TVK Vijay

TVK Leader Vijay : விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம், செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளாராம் விஜய். இதுபற்றியும் விரைவில் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார் தளபதி விஜய். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் தொடங்கியுள்ளார்.

கடந்தாண்டு வரை தனது பெயரில் தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடத்தினார். ஆனால், இந்தாண்டுக்கான கல்வி விருது விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகளும் நிதியுதவியும் வழங்கப்பட்டன. இந்தாண்டு நடைபெற்ற கல்வி விருது விழாவில், மாணவர்கள் அரசியலிலும் கவனம் செலுத்த வேண்டும். நல்ல அரசியல் தலைவர்கள் இந்த சமூகத்திற்கு தேவை, மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போல தலைவர்களும் வேண்டும் என அரசியல் பேசியிருந்தார் விஜய். 

அதேபோல் நீட் தேர்வுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்திருந்த விஜய், அதற்கான தீர்வுகள் பற்றியும் புள்ளி விவரங்களோடு பேசியிருந்தார். இந்த நிலையில் தான் அரசியல் ரீதியாக சில அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளாராம் விஜய். அதன்படி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் அழைத்து, மாநில மாநாடு நடத்த முடிவு செய்துள்ளாராம். இந்த மாநாடு செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்தில், திருச்சியில் வைத்து நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியுள்ளன.

அதன்பின்னர் 4 மண்டல மாநாடுகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என தமிழகத்தின் நான்கு திசைகளின் இந்த மண்டல மாநாடுகள் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதுதவிர 10 மாவட்ட பொதுக்கூட்டங்களையும் நடத்த வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளாராம். மிக முக்கியமாக ராகுல் காந்தி ஸ்டைலில் விஜய் நடை பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 100 சட்டமன்ற தொகுதிகளில் இந்த நடை பயணம் நடைபெறும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாம்.

விஜய்யின் இந்த முடிவால் அவரது கட்சி நிர்வாகிகளும், தவெக தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர். 2026 தேர்தலை குறிவைத்து களமிறங்கும் விஜய், முதல் தேர்தலில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்கான முன்னோட்டமாக மாநாடு, பொதுக்கூட்டம், நடை பயணம் என விஜய் அதிரடியாக முடிவெடுத்து வருவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow