ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளான பொன்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய மூன்று பேரை மீண்டும் காலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது.
Armstrong Murder Case : சென்னை பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்த நிலையில், கடந்த பதினோராம் தேதி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று ரகசியமான இடங்களிலும் கொலை தொடர்பான இடங்களிலும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம் ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பெயரில், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் அவரை மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது தப்பி செல்ல முற்பட்டதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து மீதமுள்ள 10 பேரிடமும் விசாரணை முடிக்கப்பட்டு நேற்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு போலீசார் மீண்டும் ஆஜர்படுத்தினர். பத்து பேரையும் மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கொலையில் முக்கிய நபர்களாக பார்க்கப்படும் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த திருமலை மற்றும் அருள் ஆகிய மூன்று பேரை மேலும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு கூடுதலாக மூன்று நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக கடந்தாண்டு ரவுடி ஆற்காடு சுரேஷை கொலை செய்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் தான் இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து ஆதாரங்களை திரட்ட கொலையில் முக்கியமான மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதியதாக எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து போலீஸ் காவலில் எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.