ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. திமுகவை தொடர்ந்து தவெக புறக்கணிப்பு?
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்த நிலையில் தவெக-வும் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. திமுகவை தொடர்ந்து தவெக புறக்கணிப்பு?](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_6795b91d25ce1.jpg)
குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தேசிய கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின், போது காவலர்களுக்கு பல்வேறு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும் படிக்க: ஆளுநரின் தேநீர் விருந்து.. தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
இதையடுத்து இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் விசிக, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன. தொடர்ந்து, நேற்று (ஜன 25) ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே, தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அதன் வெளிப்பாடாக தமிழ்நாடு அரசு இவ்வாறு அறிவித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் போது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக நீடிப்பதால் ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்வியை விஜய் எழுப்பியிருந்தார். மேலும், மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)