'விடாமுயற்சி’ உடன் பல நிலைகளை வென்றவர்.. அஜித்திற்கு ஜெயக்குமார் வாழ்த்து
'பத்ம பூஷன்' விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
!['விடாமுயற்சி’ உடன் பல நிலைகளை வென்றவர்.. அஜித்திற்கு ஜெயக்குமார் வாழ்த்து](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_6795bd85b4051.jpg)
2025-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியல் மத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கும் மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி, நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, நடிகை சோபனா ஆகியோருக்கு 'பத்ம பூஷன்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் அஷ்வின், குருவாயூர் துரை, தமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன், தேவசேனாபதி, சீனி விஸ்வனாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு 'பத்ம ஸ்ரீ' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமாருக்கு 'பத்ம பூஷன்' விருது அறிவிக்கப்பட்டதையடுத்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பத்ம பூஷன் விருது.. இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும்- அஜித் உருக்கம்
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தன் வாழ்வின் பல கட்டங்களில் கடுமையான நெருக்கடிகளை கடந்து விடாமுயற்சியுடன் பல நிலைகளை வென்று பத்மபூஷன் விருது பெறவுள்ள சகோதரர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்!
கடின உழைப்புகளால் கனவுகளையும் கடந்த இடத்தை பிடிக்கலாம் என எண்ணற்ற இளைஞர்களுக்கு உதாரணமாக உள்ள அஜித் இன்னும் பல சாதனைகளும் அதற்கான விருதுகளும் பெற்றிட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 'பத்ம பூஷன்' விருது அறிவிக்கப்பட்டதையடுத்து நடிகர் அஜித்குமார் உணர்வுபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்தியாவின் குடியரசு தலைவரிடமிருந்து மதிப்புமிக்க பத்ம பூஷண் விருதை பணிவோடும் பெருமையோடும் ஏற்றுக்கொள்கிறேன். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான நன்றிகள். தேசத்துக்கான என்னுடைய பணிகள் அங்கீகரிக்கப்பட்டதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இருப்பினும் அவர் பெருமையாக உணர்வார். என் மீது அளவு கடந்த அன்பை பொழிந்து, பல தியாகங்களை செய்த என் அம்மாவிற்கு நன்றி. கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம்.
என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)