‘இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது' - செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டம்

செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், அவகாசம் கோரிய மத்திய அரசிடம், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Aug 20, 2024 - 11:35
 0
‘இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது' - செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டம்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 14 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் ஜாமின் கோரி உச்சநீதிமன்ற கதவை தட்டியுள்ளார் செந்தில் பாலாஜி(Senthi Balaji Case). இன்று உச்சநீதிமன்றம் ஜாமின் வழக்கை விசாரித்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி (Senthi Balaji) மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில்(Money Laundering Case) ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

இதனிடையே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, கடந்த ஆக.8-ம் தேதியன்று செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அமலாக்கத்துறையின் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இதனிடையே ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் வழக்காக பட்டியலிடப்படும் என்றும் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாளின் இறுதிக்கு ஒத்திவைக்க, மத்திய அரசு தரப்பு அவகாசம் கோரியது. அப்போது கூறிய நீதிபதிகள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது, இன்று இறுதி நாள் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow