கோவாவில் சகோதரிக்காக தனது சிறுநீரகத்தை இளைய சகோதரர் ஒருவர் தானமாக வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. சினிமாக்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் சகோதர-சகோதரி உறவு என்பது அழகானதே. இரு நண்பர்கள் கொண்டிருக்கும் புரிதல், எதிரிகளை போல சண்டை என நெருப்பும் பனியும் போல இருந்தாலும், தேவையான நேரத்தில் உடன் நிற்கும் உறவு தான் சகோதர-சகோதரி உறவு. இந்த மகத்தான உறவை கொண்டாடுவதற்காகவே ரக்ஷா பந்தன் பண்டிகை உள்ளது.
ரக்ஷா பந்தனின் போது சகோதரிகள் நல்ல நேரத்தில் தங்களது சகோதரர்களுக்கு ஆரத்தி எடுத்து, திலகமிட்டு, பாசத்தோடு ராக்கி கட்டி விடுவார்கள். பதிலுக்கு சகோதரிக்கு பரிசளித்து, காலம் முழுவதும் அவர்களை பத்திரமாக பாதுகாப்பேன் என சகோதரர்கள் உறுதியளிப்பார்கள். இவ்வாறே கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன். ஆனால் பத்திரமாக பாதுகாப்பேன் என வெறும் வாய் வார்த்தையாக கூறாமல் அதை செயலில் காட்டியிருக்கிறார் கோவாவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
கோவாவில் வசித்து வரும் 43 வயதான பெண் ஒருவர் வெகு நாட்களாக சிறுநீரக கோளாரால் தவித்து வந்தார். இவருக்கு 35 வயதில் ஒரு சகோதரரும் உள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால், அவருக்கு சிறுநீரகம் மாற்று சிகிச்சை தேவைப்பட்டது.
மேலும் படிக்க: கொல்கத்தா டாக்டர் கொடூர கொலை..மிகப்பெரிய சதி.. 'அதை' அறுத்து வீசணும்.. நடிகை கஸ்தூரி ஆவேசம்
சகோதரியின் இந்த நிலையை பார்த்து மனம் தாங்கமுடியாமல் போன சகோதரர், தன்னுடைய சிறுநீரகத்தை தருவதாக மனமுவந்து ஒப்புக்கொண்டார். இதனால் அந்த சகோதரரை சுத்தமாக பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக தானம் அளிக்க அனுமதி வழங்கினர். பிறகு லாப்ரோஸ்கோபிக் முறையில் சிறுநீக மாற்று சிகிச்சை நடத்தப்பட்டு அப்பெண் உயிர்பிழைத்தார்.
தன்னை பற்றிக்கூட யோசிக்காமல், தனக்காக தனது உடலின் ஒரு உறுப்பான சிறுநீரகத்தை தானம் வழங்கிய தம்பியை நினைத்து தான் எப்போதும் பெருமைப்படுவதாக அப்பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த பாசக் கதை, உறுப்பு தானத்திற்கு முன்னோடியாகவும் இருக்கிறது என்றால் மிகையாகாது.