சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் வரும் 23ம் தேதி வெளியாகிறது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா ரஞ்சித், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகர்கள் சூரி, கவின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் பா ரஞ்சித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது, “கடந்த சில ஆண்டுகளாகவே எங்களது படங்களுக்கு எந்தளவுக்கு பாராட்டுகள் கிடைக்கிறதோ, அதே அளவு விமர்சனங்களும் ட்ரோல்களும் செய்யப்படுகின்றன. முக்கியமாக மிக மோசமான வார்த்தைகளால் ட்ரோல் செய்யப்படுகின்றன. இதெல்லாம் எங்களுக்கு சாதாரணமான விஷயம் தான். சின்ன வயதில் இருந்தே பல ட்ரோல்களை பார்த்து பார்த்து வளர்ந்துள்ளோம். மாரி செல்வராஜ் அளவுக்கெல்லாம் எனக்கு தைரியம் கிடையாது, அவனுடைய வழிகளை தைரியமாக சொல்ல முடிகிறது. ஆனால், என்னால் அது கண்டிப்பாக முடியாது.

எனக்கு இருக்கும் வழிகளை யார் மீதும் சுமத்திடக் கூடாது என தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறேன். என் அப்பா, அம்மா சீன் எடுத்தாலே எனக்கு எமோஷனல் ஆகிவிடும்” எனக் கூறிய ரஞ்சித், அட்டக்கத்தி படத்தில் வரும் ஒரு காட்சியை அதற்கு உதாரணமாக சுட்டிக் காட்டினார். ”மாரி செல்வராஜ் தனது முதல் படமான பரியேறும் பெருமாள் ரொம்பவே வலிகள் நிறைந்த ஒரு படைப்பு. தனது வலிகளை சினிமாவாக எடுப்பதில் மாரி செல்வராஜ்ஜிடம் பெரிய வேட்கை இருக்கிறது. அதேபோல் மாரி செல்வராஜ்ஜின் பெரிய பலமே கதை சொல்வது தான்.
மேலும் படிக்க - மாரி செல்வராஜ்ஜின் வாழை படத்தை பாராட்டிய பிரபலங்கள்
ஒரு கதையை எவ்வளவு எளிமையாக சொல்ல முடியும் என்பதில் மாரி செல்வராஜ் நிதானமாக செயல்படுகிறார். அதேபோல் வாழை படத்தின் மூலமும் தனது வாழ்வியலை இன்னும் வெளிப்படையாக பேச மாரி செல்வராஜ் முன்வந்துள்ளான். அதேநேரம் தனது வலிகளை படமாக காட்டும் போது மாரி செல்வராஜ்ஜை பாராட்டுபவர்கள், அவன் கர்ணனா நின்னு சண்டை போடும் போது கடுமையாக விமர்சிப்பார்கள். நான் என்ன எடுக்கணும், எப்படி எடுக்கணும் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பார்களா..? எனவும் இயக்குநர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.

“தனது படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மாரி செல்வராஜ் முடிவு செய்கிறான். ஆனால், அதனை புரிந்துகொள்ளாமல் பரியேறும் பெருமாள் தான் நல்ல படம், கர்ணன், மாமன்னன் எல்லாம் மொக்கை படங்களா..? கர்ணன் படம் ஏன் புடிக்காமல் போகிறது, ஏனென்றால் மாரி செல்வராஜ் திருப்பி அடிக்கிறான். திருப்பி அடித்தால் புடிக்கவில்லை என்கின்றனர். ஆனால் ஏன் திருப்பி அடிக்கிறான், என்ன பிரச்சினை நடக்குது என யாரும் கேள்வி கேட்பதில்லை. ரசிகர்களின் கம்ஃபர்ட் ஜோனிலேயே நாங்கள் படம் எடுக்க வேண்டுமா..? இதுதான் முக்கியமான கேள்வி, அந்த கம்ஃபர்ட்டை உடைத்து எடுக்கப்பட்ட படங்கள் தான் கர்ணனும் மாமன்னனும்.

அப்படித்தான் இப்போது வாழை படமும் வெளியாகவுள்ளது. ஆனால், என்னைப் பொறுத்தவரை மாரி செல்வராஜ் படங்களும் எனது படங்களும் ஆட்டோ பயோகிராஃபி தான். அட்டக்கத்தி முதல் இப்போது வரை நான் இயக்கிய படங்கள் எல்லாமே பயோகிராபி தான்” என ஆவேசமாக பேசினார் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான தங்கலான் திரைப்படத்தை, ரசிகர்கள் பலரும் பயங்கரமாக ட்ரோல் செய்திருந்தனர். ஆனாலும் தங்கலான் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









