Vaazhai: “தமிழில் தரமான உலக சினிமா..” மாரி செல்வராஜ்ஜின் வாழை படத்தை பாராட்டிய பிரபலங்கள்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் மிஷ்கின், ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

Aug 20, 2024 - 16:29
Aug 20, 2024 - 16:59
 0
Vaazhai: “தமிழில் தரமான உலக சினிமா..” மாரி செல்வராஜ்ஜின் வாழை படத்தை பாராட்டிய பிரபலங்கள்!
வாழை படத்தை பாராட்டிய பிரபலங்கள்

சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என தரமான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இவரது அடுத்த படமான வாழை வரும் வெள்ளிக் கிழமை வெளியாகிறது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா ரஞ்சித், நெல்சன், ரவிக்குமார், நித்திலன் சாமிநாதன், மிஷ்கின், தியாகராஜா குமாரராஜா, நடிகர்கள் சூரி, கவின், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிவகார்த்திகேயன், சிம்பு இருவரும் காணொளி வாயிலாக வாழை படத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் ரொம்ப முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். தன்னோட வாழ்க்கைல நடந்த மிகப் பெரிய சோகத்தை இந்தப் படத்துல பதிவு செஞ்சிருக்கார். ஒரு வாழ்வியலை பதிவு செய்யும் போது அந்த சினிமாவே ரொம்ப அழகாகிடும். இந்தப் படம் மொத்தமும் மனதுக்கு நெருக்கமாக அப்படியொரு அனுபவத்தைத் தருகிறது. நடிகர்களும், டெக்னிக்கல் டீமும் வாழை படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கண்டிப்பாக இந்தப் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல், சிம்புவும் வாழை படத்தை ரொம்பவே பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியதில் கர்ணன், மாமன்னன் படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். மாரி செல்வராஜ்ஜும் நானும் சினிமா குறித்து நிறைய பேசியுள்ளோம். வாழை மாரி செல்வராஜ்ஜின் ரியல் லைஃப் ஸ்டோரியாக உருவாகியுள்ளது, சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றார். உண்மைச் சம்பவங்களை அப்படியே ரியலிஸ்ட்டிக்காக வாழை படத்தில் காட்டியுள்ளதாக மாரி செல்வராஜ்ஜை பாராட்டினார்.

இவர்களைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு நேரில் சென்றிருந்த இயக்குநர் மிஷ்கின், மேடையில் ஏறி தெறிக்கவிட்டார். சூரியின் கொட்டுக்காளி பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், இப்படத்துக்காக நிர்வாணமாக டான்ஸ் ஆட ரெடி என பேசி ட்ரெண்டிங்கில் வந்தார். அதனால் இப்போது கெட்டவார்த்தை இல்லாமல் பேசப் போகிறேன் என சொல்லிக்கொண்டே வாழை படத்தை பாராட்டினார். அதாவது இந்தியாவை புரிந்துகொள்ள பதேர் பாஞ்சாலி படத்தை பார்க்க வேண்டும் என்பார்கள். அதேபோல் தமிழ்நாட்டை புரிந்துகொள்ள வாழை படத்தை பாருங்கள் என்றார். 

மேலும் படிக்க - விஜய்யின் சொகுசு காரில் இவ்வளவு வசதிகளா

தொடர்ந்து பேசிய அவர், 6 வயது, 8 வயது குழந்தைகளிடம் எப்போதும் உண்மை இருக்கும். அதனை வாழை படத்தில் மாரி செல்வராஜ் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். அம்மா, அக்கா, தங்கை இவர்களை தாண்டி இன்னொரு உறவு என்றால் டீச்சர்தான். இந்தியாவிலேயே ஒரு டீச்சருக்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவை மாரிசெல்வராஜ் அழகாக கொண்டு வந்துள்ளார். அதேநேரம் இதில் இருக்கும் ஒரு வருத்தம் என்னவென்றால் அந்த டீச்சரை மலையாளத்திலிருந்து கூட்டி வந்திருக்கிறார் மாரி செல்வராஜ். தமிழ்நாட்டில் டீச்சரே இல்லை போல. ஆனால் டீச்சர் கேரக்டரில் நிகிலா விமல் அருமையாக நடித்துள்ளார். கலையரசனும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார், ஆனாலும் சூரி அளவிற்கு இல்லை எனக் கூறினார். 

அதேபோல், கொட்டுக்காளி பட விழாவில் நான் பேசியதை பலரும் கலாய்த்தனர். அதனால் இங்கே நான் ரொம்ப சந்தோஷமாகவும் வருத்தமாகவும் இந்த மேடையை விட்டு இறங்குகிறேன். நான் பேசுவது வைரலானால் சரக்கு அடிச்சிட்டு பேசிருப்பார்ன்னு சொல்வாங்க. ஆனால் நான் சரக்கு அடிச்சு ரொம்ப நாள் ஆகுது. வாழை படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பாருங்க, அதேபோல், சூரியின் கொட்டுக்காளி படமும் மிஸ் செய்துவிடக் கூடாது என இயக்குநர் மிஷ்கின் பேசினார். மேலும், நடிகர் சூரி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர்கள் அமீர், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரும் வாழை படத்தை வெகுவாகப் பாராட்டி பேசினர்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow