காரில் கடத்தி நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. கடத்தல் கும்பல் தலைவன் காங். நிர்வாகி என தகவல்
காரில் கடத்தி கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து 13,62,500 ரூபாயை அபகரித்ததாக காங்கிரஸ் கட்சி பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஓ.வீ.ஆர்.ரஞ்சித் மற்றும் கூட்டாளிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூரை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் மைதீன் ராஜா (44), இவர் பழைய இரும்பு பொருட்கள் வியாபாரமான ஸ்கிராப் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு லுட்வின் ராஜ் (40), என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து ரூபாய் 70 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். 2020ஆம் ஆண்டு முதல் அவரிடம் எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றாலும் அவ்வப்போது செல்போனில் அழைத்து தொழில் குறித்து நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மைதீன் ராஜா மகன் நீட் தேர்வில் 435 மதிப்பெண் எடுத்து மருத்துவப் படிப்பில் சேர்க்க மருத்துவ சேர்க்கைக்காக அலைந்து கொண்டிருந்துள்ளார். இந்த தகவல் அறிந்து கொண்ட லுட்வின் ராஜ், எனக்கு மாதா மருத்துவக் கல்லூரி உரிமையாளர் நல்ல பழக்கம், அவரிடம் சொல்லி மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி, மைதீன் ராஜாவை முகப்பேரில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த 23ஆம் தேதி செல்போனில் பேசி வரவழைத்து உள்ளார்.
அங்கிருந்து ஓலா வாடகை கார் மூலம் திருவான்மியூர் சென்று, உணவகத்தில் இருவரும் சாப்பிட்டு விட்டு, மாதா கல்லூரி உரிமையாளர் ஈசிஆரில் உள்ள விடுதியில் தங்கி இருப்பதாக லுட்வின் ராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து, மீண்டும் ஓலா டாக்சி மூலம் கிழக்கு கடற்கரை சாலை கானாத்தூர் மாயாஜால் அருகே இறங்கி கடையில் டீக்குடித்து விட்டு காத்திருந்துள்ளனர்.
வெகு நேரம் ஆன நிலையில் மைதீன் ராஜா நாம் ஏன் இங்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என லுட்வின் ராஜிடம் கேட்டபோது கல்லூரி உரிமையாளர் கார் அனுப்புவதாக சொல்லி இருக்கிறார் என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் கட்சி கொடி பறந்தபடி வெள்ளை நிற கார் ஒன்று வந்துள்ளது. இது யாருடைய கார் என கேட்பதற்குள் மைதீன் ராஜாவை வலுகட்டாயமாக காரில் கடத்திக் கொண்டு, ஈசிஆர் சாலையில் புதுச்சேரி செல்லும் மார்க்கமாக சென்றுள்ளனர்.
காரின் உள்ளே ஏற்கனவே 5 பேர் இருந்த நிலையில் கானத்தூர் காவல் நிலையம் அருகே செல்வதற்கு முன்னதாக, சிறிது தூரம் சென்றவுடன் மற்றொரு காரில் வந்த ஒருவர், மைதீன் ராஜா இருந்த காரில் ஏரி பெல்ட் மற்றும் இரும்பு கம்பியால் மைதீன் ராஜாவை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார்.
மேலும், செல்போனில் உள்ள G-pay மூலம் வங்கி பண பரிவர்த்தனை செய்ய பாஸ்வோர்டை கேட்டு அடித்துள்ளனர். வலி தாங்க முடியாமல் G-pay பாஸ்வேர்டை சொல்லிய பிறகு மைதீன் ராஜா வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 5 லட்சம் என இரண்டு முறை பணம் பரிவர்த்தனை செய்து ரூபாய் 10 லட்சத்தை லுட்வின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளனர்.
சிறிது நேரத்தில் மற்றொரு கார் வர மைதீன் ராஜா இருந்த காரில் இருந்து, இருவர் மற்றொரு காருக்கு சென்றனர். பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் ஓதியூர் என்ற பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பெரிய வீட்டிற்கு அழைத்து சென்று நிர்வாணமாக்கி, கையை பின்னால் கட்டிப்போட்டு இரும்பு ராடாலும், பெல்டாலும் சுமார் 10 பேர் அடித்து துன்புறுத்தி மேலும் 30 லட்சம் கேட்டுள்ளனர்.
அவ்வளவு பணம் இல்லை என கூறியதால் பேரம் பேசி 30 லட்சத்தில் துவங்கி 5 லட்சமாவது யாரிடமாவது அனுப்ப சொல்லி கொடுத்துவிட்டு போய்விடு என மிரட்டினர். ஒரு கட்டத்தில் இரவில் நான் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக எனது இரு காலிலும் இரும்பு ராடால் கடுமையாக தாக்கியுள்ளனர் என மைதீன் ராஜா கூறினார்.
மேலும், மைதீன் ராஜா அவருக்கு தொழில் ரீதியாக தெரிந்தவர்களிடம் கேட்டு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் பெற்றதையும் லுட்வின் கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளனர். மேலும் அவரது ஆக்சிஸ் வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய் 2500-யை கூட விட்டு வைக்காமல் அவர்களது Gpay விற்கு அனுப்பி கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மைதீன் ராஜாவை 12 காசோகளில் மிரட்டி கையொப்பமிட்டு பிடிங்கிக் வைத்துக் கொண்டுள்ளனர்.
பின்னர், மறுநாள் 24ஆம் தேதி நண்பகல் ஓதியூர் கடற்கரையில் வீட்டில் இருந்து காரில் மைதீன் ராஜாவை அழைத்துக் கொண்டு சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இறக்கி விட்டுவிட்டு, இன்னும் ஒரு வாரத்தில் 10 லட்சம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் குடும்பத்தோடு கடத்தி உன்னை போன்று அவர்களையும் நிர்வாணமாக ஆக்கி விடுவோம் என மிரட்டி விட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட மைதீன் ராஜா புகாரில் கூறியிருந்தார்.
மைதீன் ராஜாவிடம் இருந்து அனைத்து பணத்தையும் பிடுங்கிக் கொண்டு கடத்தல் கும்பல், கேளம்பாக்கத்தில் இறக்கிவிடும் போது அவரது செல்போன் மற்றும் வீட்டிற்கு செல்ல கை செலவிற்கு ரூ.1000 கொடுத்துள்ளனர். அதன் மூலம் கால் டாக்சி புக் செய்து வீட்டிற்கு சென்ற மைதீன் ராஜா, குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, 29ஆம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலதாமதம் ஆக்கியதால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டினார்.
பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடத்திய நபர்கள் பெயர், அவர்கள் யார் என்பது குறித்து தெரியாத நிலையில் கானத்தூருடன் சேர்ந்து தன்னை கடத்தி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளார்.
அந்தப் பகுதிக்கு சென்ற நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் விளம்பர பேனரில் கடத்தல் கும்பல் தலைவன் படம் இருந்ததை பார்த்து போலீசாரிடம், இவர்தான் கடத்தி அடித்து பணத்தை பறித்தார் என கூறியுள்ளார். அது குறித்த விசாரணையில், கடத்தல் கும்பல் தலைவன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், பிரபல ரவுடியுமான ஓதியூர் கிராமத்தை சேர்ந்த ஓ.வி.ஆர்.ரஞ்சித் என்பது தெரியவந்தது.
இதனை புகாரில் எழுதிக் கொடுத்தும் எப்.ஐ.ஆரில் பிரபல ரவுடி பெயரை போடவில்லை என பாதிக்கப்பட்ட மைதீன் ராஜா குற்றம்சாட்டினார். கடத்திய நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 13 லட்சத்து 36 ஆயிரத்து 1500 ரூபாய் பணத்தையும், 12 காசோலையையும் பெற்று தருமாறும், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
What's Your Reaction?