பாஜகவால் செய்ய முடியாது.. ஈகோவை மட்டும் திருப்திபடுத்தும் - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின்

பாஜகவால் ஒரே ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும் இது திசை திருப்பல் தந்திரம் தான் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sep 19, 2024 - 12:59
Sep 19, 2024 - 13:04
 0
பாஜகவால் செய்ய முடியாது.. ஈகோவை மட்டும் திருப்திபடுத்தும் - ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின்
பாஜகவால் ஒரே ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது - மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன்பிறகு 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முடிவுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதே சமயம், இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள், தொடர்ந்து விமர்சித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் பலதரப்பட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைப் புறக்கணிக்கும் ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற கருத்தாகும். மேலும், கூட்டாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக உள்ளது. தேர்தல் சுழற்சிகள், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் பரந்த வேறுபாடுகள் கொண்டுள்ள நிலையில், அடிப்படையிலேயே இது சாத்தியமற்றது.

ஆட்சியின் இயல்பான போக்கை சீர்குலைப்பதோடு, அனைத்து அலுவலக விதிமுறைகளையும் உண்மையற்ற சீரமைவுக்கு இட்டுச் செல்லும்.

இந்த முன்மொழிவுகள் அனைத்தும் பிஜேபியின் ஈகோவை திருப்திபடுத்தும் நடவடிக்கையையே. ஆனால் அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைந்து கொடுக்க முடியாது. இந்த திசை திருப்பல் தந்திரங்களில் சக்தியை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு வளங்களை சமமாக விநியோகித்தல் போன்ற அழுத்தமான பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow