ஆளுநரின் தேநீர் விருந்து.. தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ள நிலையில் அதனை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா நாளை (ஜன 26) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். பின்னர் நடைபெறும் அணி வகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக்கொள்வார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். அதே சமயம் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. ஆளுநரின் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் விசிக, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு பின் தேசிய கீதம் பாடவில்லை என குற்றம்சாட்டி பேரவையில் இருந்து வெளியேறினார்.
வந்த நான்கு நிமிடங்களில் ஆளுநர் உரையை கூட வாசிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஆளுநரின் இந்த செயலுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதன் வெளிப்பாடாக தான் தற்போது தமிழக அரசு ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?