பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் முதல் விஜய் வரை.. வாழ்த்து மழை பொழியும் தலைவர்கள்!
''நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ’எக்ஸ்’ பக்கத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘’பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ’’நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்தபாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள்’’என்று கூறியுள்ளார்.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘’இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 74ம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நீண்ட காலம் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்; இந்தியத் திருநாட்டை வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘’பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலம், மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?






